நிஷாந்த உலுகேதென்னவின் அதிரடி வாக்குமூலம்.. வெள்ளை வான் கடத்தல் குறித்து பல தகவல்கள் அம்பலம்
உள்நாட்டு போரின் போது, இரு பெண்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, முன்னாள் கடற்படை பெண் அதிகாரிகள் இருவரை ஒக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை முதன்மை நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி செல்சியா ஆகிய இரு பெண்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டில், குறித்த அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
2008 மே 13இல் கடத்தப்பட்ட இப்பெண்கள், திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள 'கன் சைட்' (Gun Site) எனும் நிலத்தடி இரகசிய முகாமில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருகோணமலை கன்சைட்
சூரிய வெளிச்சம் புகாத குன்றின் மீதமைந்த பழமையான ஆயுதக் கிடங்கான இந்த 'கன் சைட்' தளம், கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க தலைமையிலான "சிறப்பு புலனாய்வுப் பிரிவினால்" இயக்கப்பட்ட ஒரு சட்டவிரோத தடுப்பு முகாம் என்பதை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் சிஐடி விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு 40 முதல் 100 பேர் வரை அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பதிவு செய்யப்படாத வெள்ளை வான்கள் மூலம் கைதிகள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
2015இல் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவும் இத்தளத்தில் சித்திரவதைகள் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், 2008 - 2009 காலப்பகுதியில் கொழும்பில் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்கள் 11 பேரும் 'பிட்டு பம்புவ' முகாமிலிருந்து இந்த 'கன் சைட்' நிலத்தடி முகாமிற்கே மாற்றப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன உட்படப் பலர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
