நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் (Nuwara Eliya) வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இம்மாதம் 30ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையால் சித்திரை புத்தாண்டு பண்டிகை விடுமுறையை கழிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக நுவரெலியா பிரதான நகர் ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்ட கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர்.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் போன்ற பிராதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பொலிஸார்
இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி மற்றும் நகர்ப்பகுதிகளில் கூடுதலான எண்னிக்கையில் போக்குவரத்து பொலிஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த வருடங்களை விட இம்முறை பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |