பௌத்த மத அமைப்பிற்குள் ஊடுருவி உளவு பார்த்த பெண்! வெளியான ஆவணங்கள்
அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு பௌத்த மத அமைப்பிற்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சீனப் பெண் ஒருவரின் ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்த நீதிமன்ற ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் 'குவான் யின் சிட்டா தர்மா டோர்' (Guan Yin Citta Dharma Door) எனும் பௌத்த மதக் குழுவைக் கண்காணிக்கச் சீன அரசு அந்தப் பெண்ணைப் பணி அமர்த்தியதாக அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸ் (AFP) குற்றம் சாட்டியுள்ளது.
ஆடம்பரமான வாழ்க்கை
இந்தப் பிரிவு சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் கைது செய்யப்படுவதற்கு முன்பு மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

சோதனையின் போது அவரிடமிருந்து ஏராளமான ரொக்கப் பணம், விலையுயர்ந்த சொகுசு கைப்பைகள் மற்றும் 24,000 டொலர் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்திற்கான பற்றுச்சீட்டு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்தப் பெண் நாடு முழுவதும் உள்ள பௌத்தக் குழுவின் கிளைகளைப் புகைப்படம் எடுப்பது, அதன் தலைவர்களின் ரகசியத் தகவல்களைச் சேகரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு
அவுஸ்திரேலியப் பாதுகாப்பு அமைப்பான ASIO, வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது.

"வெளிநாட்டு உளவு அமைப்புகள் அவுஸ்திரேலியர்களை மிகவும் ஆக்ரோஷமாக குறிவைக்கின்றன" என்று ASIO பணிப்பாளர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத வெளிநாட்டுத் தலையீடு (Reckless Foreign Interference) சட்டத்தின் கீழ் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.