பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சீனாவில் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் ஒரு பகுதியாக, பிரித்தானிய குடிமக்கள் 30 நாட்கள் வரை விசா இன்றி சீனாவிற்குப் பயணம் செய்ய அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளில் சீனாவிற்குப் பயணம் செய்யும் முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஸ்டார்மரின் இந்தப் பயணத்தின் மூலம், பிரித்தானிய மதுபானமான விஸ்கி மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடும் விமர்சனங்கள்
மேலும், ஆங்கிலக் கால்வாய் வழியாகப் புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் படகுகளின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் சீனாவிலிருந்து விநியோகிக்கப்படுவதைத் தடுக்க இரு நாட்டுப் பாதுகாப்புப் படைகளும் இணைந்து செயல்பட உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் சீனாவில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யும் என்ற அறிவிப்பும் வெளியானது.
இருப்பினும், சீனாவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இத்தகைய நெருங்கிய உறவு தேவையா என்று பிரித்தானிய எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.