ட்ரம்பின் தீவிரமான குடியேற்றக் கட்டுப்பாடுகள்! வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் தொகை
அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பு சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரமான குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, 2024-ல் 2.7 மில்லியனாக இருந்த நிகர சர்வதேசக் குடியேற்றம் (Net International Migration), 2025-ல் 1.3 மில்லியனாகப் பாதியாகச் சரிந்துள்ளது.
மிகப்பெரிய வெற்றி
2026-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, சுமார் 3.2 லட்சமாக மாறும் என்றும், இது எதிர்மறையான நிலையை (Negative Net Immigration) எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அரசின் தீவிர நாடுகடத்தல் நடவடிக்கைகள் மற்றும் சுமார் 75 நாடுகளுக்கு குடியேற்ற விசா வழங்கத் தற்காலிகத் தடை விதித்தது போன்ற அதிரடி முடிவுகளே இந்த வரலாற்றுச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதனைத் தனது அரசின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதும் ட்ரம்ப் நிர்வாகம், இதன் மூலம் வரி செலுத்துவோரின் பணம் சேமிக்கப்படுவதாகவும், அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.