அமைச்சரின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி செய்த பாரிய மோசடி அம்பலம்
அமைச்சர் விஜித ஹேரத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLFEB) சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் உறுப்பினர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடியில் சிக்கிக் கொண்டவர்கள்
சந்தேக நபரிடம் பல போலி கடிதத் தலைகள், கடவுச்சீட்டுகளின் நகல் மற்றும் ஏராளமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கனடாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சந்தேக நபர் 11 பேரை ஏமாற்றி, ரூ.3 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு சந்தேக நபர் அமைச்சர் விஜித ஹேரத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்துவதாக SLFEB க்கு கிடைத்த இரண்டு புகார்களைத் தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கண்டி, பிலிமத்தலாவையைச் சேர்ந்த சந்தேக நபர், யட்டினுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். சந்தேக நபர் பல ஆண்டுகளாக இதேபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், கண்டி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.