வடக்கில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் - ஆளுநர் தெரிவிப்பு
முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது, போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வடக்கு மாகாணம் மீளக்கட்டியெழுப்பப்படுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.
முதலீட்டாளர் மாநாட்டைக் கருத்தில் கொண்டு
பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற வீதிகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் சவாலாக உள்ளது. எனினும், இந்தியாவுடனான நேரடி வான் மற்றும் கடல்வழித் தொடர்புகள் சுற்றுலாவிகளின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள சுற்றுலாப் பயணிகளைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டைக் கருத்தில் கொண்டும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
எமது மாகாணத்தின் மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் முடிவுப் பொருட்களாக இங்கேயே விற்பனைக்கு வரும் நிலை மாற்றப்பட வேண்டும். இங்கேயே அவற்றைப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்குரிய பொறிமுறைகள் அவசியம்.
உலக வங்கித் திட்டங்கள்
இதன்போது மாவட்டச் செயலாளர்களால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
முல்லைத்தீவு: கொக்கிளாய் பாலம் அமைத்தல்.
கிளிநொச்சி: நீர் விநியோகத் திட்டம் மற்றும் பூநகரி கௌதாரிமுனைச் சுற்றுலா வீதிப் புனரமைப்பு.
மன்னார்: வீதிப் புனரமைப்பு மற்றும் மன்னார் தீவின் வடிகாலமைப்பு மேம்பாடு.

வவுனியா: வடக்கின் நுழைவாயிலான வவுனியாவின் வன்னேரிக்குளம் சுற்றுலாத் திட்டத்தை உள்வாங்குதல்.
யாழ்ப்பாணம்: தெரிவு செய்யப்பட்ட திட்டங்களை விரைவுபடுத்தல். இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள், 'வடக்கு மாகாணத்திலிருந்து நியாயப்பாடுகளுடன் கூடிய சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் உலக வங்கித் திட்டங்களை மாற்றியமைக்க முடியும்.
எனினும், இவை கடன் நிதிகள் என்பதால், முதலீட்டுக்குரிய நற்பேறுகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தேவைப்பாடுகளை சரியாக அடையாளம் கண்டு மிகச் சிறந்த திட்டங்களை முன்வைக்கும்போது அரசாங்கத்தால் கூட நிதி வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டனர்.
இக்கலந்துரையாடலில் நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகங்களான இந்திக பிரேமரத்ன (தேசிய திட்டமிடல்), ஜூட் நிலுக்ஷ (தேசிய வரவு-செலவு), சமந்த பண்டார (வெளிநாட்டு வளங்கள்) மற்றும் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் தலைவர் அகிலன் கதிர்காமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



