இன்று வல்லிபுரம் ஆழ்வார் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இன்று(26.09.2026) பிற்பகல் 4 மணியளவில் கற்கோவளம் வங்கக்கடலில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
ஆலயத்தில் இடம்பெறும் விசேட பூஜைகளைத் தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி சகிதம் பிள்ளையார், வல்லிபுரம் சுவாமி மற்றும் இலட்சுமி அம்மன் ஆகியோர் வங்கக்கடல் நோக்கி எழுந்தருளிச் செல்வார்கள்.
அங்குள்ள சிற்றாலயத்தில் சுவாமிகள் அமர்ந்திருக்க விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் தீர்த்த உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெறும்.
வருடாந்த மஹோற்சவம் நிறைவு
தீர்த்த உற்சவம் நிறைவுற்றதும் சுவாமிகள் மீண்டும் கோயிலை நோக்கித் திரும்புவார்கள்.

இந்தச் சமுத்திரத் தீர்த்த உற்சவத்தில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைத் தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கோயில் சுற்றாடலில் உள்ள தீர்த்தக் கேணியில் பட்டுத்தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
இதன் ஊடாக இந்த ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளது. இந்தத் தீர்த்தத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.