கருங்கடல் பகுதியில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! கூடுதல் ரோந்து விமானங்களை அனுப்பும் நேட்டோ
கருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நேட்டோ அமைப்பு கூடுதல் ரோந்து விமானங்களையும் உளவுத்துறை அதிகாரிகளையும் களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கடல் ரோந்து விமானங்கள், ரேடார் அமைப்புகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிமருந்து தடயவியல் நிபுணர் குழுக்கள் ஆகியவை கருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுவதாக நேட்டோ பேச்சாளர் கேர்னல் மார்ட்டின் ஓ'டொனெல் தெரிவித்தார்.
உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ள நிலைமை
இந்தப் பகுதியில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், சென்சார்கள் மற்றும் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் முன்னுரிமை அளிக்கப்படும் என நேட்டோ குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் ரோமேனியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கு அருகில் பல சரக்குக் கப்பல்கள் மற்றும் ரசாயன கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல மாலுமிகள் கொல்லப்பட்டதும், பலர் மாயமானதும் உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கஜா கல்லாஸ் (Kaja Kallas) இந்தத் தாக்குதல்களை ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பதற்றத்தின் உச்சம் என எச்சரித்துள்ளார்.