கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி விபத்தின் போது போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தார் என மருத்துவ அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டிப்பர் வாகனத்தின் உரிமையாளரையும் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிப்பர் வாகனங்களால்
கடந்த மாதம் 31ஆம் திகதி கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி நோக்கிச் சென்ற பெண் ஒருவரை அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவானது.
இந்த விபத்துடன் தொடர்புபட்ட வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் இன்று முற்படுத்திய போது குறித்த சாரதி வாகனத்தை செலுத்தும் போது போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தார் என்பதுடன் நுகேகொட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த அவரது இரத்த மாதிரிகளில் அவர் விபத்தின் போது போதைப் பொருளை பயன்படுத்தியிருந்தார் என்பது தொடர்பான அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடுள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் உரிமையாளரையும் சந்தேக நபராக மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.
குறித்த டிப்பர் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறான விபத்துக்கள் பொறுப்பற்ற செயலாலே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




