சிறையில் தூக்கமின்றி அவதியுறும் சஷீந்திர ராஜபக்ச: நகர்த்தப்படும் புதிய காய்கள்..!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இன்சோமேனியா என்னும் தூக்கமின்மை நோயால் அவதிப்படுவதாகவும், அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ச, நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, ராஜபக்சவின் சட்டத்தரணிகள், தூக்கமின்மைக்கு மருத்துவ உதவி வழங்கப்படா விட்டால், அவர் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இது மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
உயர் இரத்த அழுத்தம்..
இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, சிறைத்தண்டனையில் இருந்து தப்பிக்க இவ்வாறான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றனவா என அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஒக்டோபரில் பக்கிங்ஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு தேர்வை ராஜபக்ச எழுதவிருப்பதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
எனவே அவரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைப்பது அவர் தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், பிணை வழங்க தீர்மானிப்பதில் இதை ஒரு முக்கிய காரணியாகக் கருதுமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, சஷீந்திர ராஜபக்சவை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுக்கள்
இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான விசாரணை குறித்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சஷீந்திர ராஜபக்சவை கைது செய்தது.
செவனகல, கிரிப்பன்வெவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பண்ணை கட்டிடம் ஒன்றை நிர்மாணித்ததாக சஷீந்திர ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி 'அரகலய' பொதுப் போராட்டத்தின் போது இந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் காணி இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமானது என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
இதுபோன்ற போதிலும், கட்டிடத்தின் புனரமைப்புக்கான ஒப்புதலைப் பெறுவதற்காக, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சஷீந்திர ராஜபக்ச அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




