எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்:யாழ்.அரசாங்க அதிபர் தெரிவிப்பு(VIDEO)
எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவன் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்திலே வடக்கு, கிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்ப்பாண மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது.
நேற்று முன்தினம் 6 ஆம் திகதி 33.5 சதவீத மழை தான் யாழ்ப்பாண மாவட்டத்திலே பெய்துள்ளது. இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழை வீழ்ச்சி சற்று அதிகமாக இருந்ததுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
யாழில் அவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை இன்னும் ஏற்படவில்லை. இருந்தபோதும் எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள், இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்திலே ஏற்பட்டிருக்கின்ற தாழமுக்க நிலையானது மேலும் வலுப்பெற்று நகரும்போது யாழ்ப்பாண மாவடடத்திற்கும் அந்த மழை வீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையிலே கடற்சீற்றம் சற்று அதிகமாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகவே கடற்றொழிலாளர்களை நாங்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை,வளிமண்டலத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சேத விபரங்களில் அதிக காற்று காரணமாக இன்று நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 02 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும்,ஜே 04 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 427 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சங்கானை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 171கிராம சேவகர் பிரிவில்
நேற்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உடுவில்
பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.



