WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கணக்கு ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் குழுக்கள் மூலம் பெறும் தகவல்கள் அதிகளவிலான மோசடி செய்யப்படுவதாக சாருகா தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
WhatsApp கணக்கு
“உங்களுக்குத் தெரியாத குழுக்களில் சேருவதன் மூலம் இந்த நிலைமை ஏற்படலாம். மிகக் குறைந்த விலையில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விற்பனை செய்வதாக கூறி முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
WhatsApp கணக்கு ஹேக்கிங்கிலும் அதிகரிப்பு உள்ளது. ஒன்லைனில் ஒரு கூட்டத்தில் சேர Zoom இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் இடம்பெறுகின்றது.
தொலைபேசி எண்கள்
கணக்குகள் ஹேக் செய்யப்படும்போது, பட்டியலில் உள்ள மற்றவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகின்றது.
அதற்கமைய, ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்பு கொண்டு பொருத்தமான பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்த வேண்டும்.
மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விரைவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.



