கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் தலைமைகள் சொன்னதென்ன..! செய்ததென்ன..! கிடைத்ததென்ன..!
கடந்து வந்த பாதையையும் வரலாற்றையும் அதன் லாப நட்ட கணக்கை தெரிந்து கொள்ளாமல் இனிமேலும் நடக்க வேண்டிய பாதையை தெரிவு செய்யவோ, நம்பிக்கையுடன் பயணிக்கவோ முடியாது.
சாதாரணமாக ஈழத் தமிழர்களின் வியாபாரத்தில் வெற்றி நடை போடும் காரைநகர் வியாபாரிகள் ஆண்டு இறுதியில் தங்கள் வியாபார தளத்தின் அனைத்து பொருட்களையும் இருப்பெடுப்பர்.
இருப்பிடத்தில் இருந்து தங்களுடைய லாப நட்ட கணக்கை மிகச்சரியாக கணிப்பிடுவர்.
இத்தகைய பாரம்பரிய மிக்க ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியலில் ஏன் இருப்புக் கணக்கெடுப்பை எடுக்க தவறுகின்றனர்? என்ற கேள்விக்கான விடையை தேடுவதில் இருந்து ஈழத் தமிழரின் அரசியலை இன்னொரு கட்டம் நோக்கி நகர்த்துவதற்கான வழியை திறக்க முடியும்.தமிழ் அரசியல் தலைமைகள் கடந்த 15 ஆண்டு இறுதிக் கணக்கெடுப்பை செய்வார்களா? காட்டுவார்களா?.
இறுதிவரை ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய
ஆயுதப் போராட்ட கால சகாப்தம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. அந்தக் காலத்துக்குரிய லாப நட்ட கணக்கு அதன் பொறுப்பையும் இறுதிவரை ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர் அனைவரும் பொறுப்பேற்று இறுதியில் தமது பொறுப்பின் நிமித்தம் தம்மை தியாகம் செய்து கொண்டனர்.
தாம் கொண்ட கொள்கையில் இருந்து வழுவாமல் வரித்துக் கொண்ட இலக்கியத்திற்காக இறுதி வரை போராடி இலட்சியத்திற்காகவே தம்மை அந்த மண்ணில் ஆகுதியாக்கிக் கொண்டனர்.
அது அவர்களுடைய பொறுப்பு கூறலாகவே அரசியல் வரலாற்றில் பதிவாகிறது.
2009 மே மாதத்தின் பின்னிருந்து 2025ஆம் ஆண்டு முடியும் நிலையை தொட்டிருக்கும் கடந்த 16 ஆண்டு கால அரசியலைப் பற்றி மிகுந்த வேதனையுடன் தமிழ் மக்களின் அரசியல் சீரழிந்து சின்னா பின்னப்பட்டு போயிருக்கும் சூழலில் தமிழ் மக்களின் அரசியலை சரியான பாதையில் பயணிக்க வைப்பதற்கு தலைமை தமிழ் தலைமைகளின் 16 ஆண்டு கால அரசியல் லாப நட்ட கணக்கை நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் சரியான அரசியல் கணக்கெடுப்பை தமிழ் மக்களின் முன் வைக்க வேண்டிய தர்மேகப் பொறுப்பும், ஜனநாயக பொறுப்பும், ஜனநாயக முறை தழுவிய அரசியல் ஒழுக்கமும் கண்ணியமும் தமிழ் தலைமைகளுக்கு இருக்க வேண்டும்.
அதுவே தமிழ் அரசியலை அவர்கள் சரிவர நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஊட்ட வல்லது.
இத்தகைய ஒரு அரசியல் லாப நட்ட கணக்கெடுப்பை தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து தரப்பும் முன் வைப்பார்களா? என்றால் இல்லவே இல்லை என்றே எல்லோரிடமிருந்தும் பதில் வரும்.
ஆயினும் இந்தக் கேள்வியை ஏன் கேட்க வேண்டும்? அல்லது இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பது என்பது தமிழ் மக்களின் அரசியலுக்கும், அறிவியலுக்கும், ஜனநாயக முறைமைக்கும் இழுக்கை ஏற்படுத்தும் என்பது மாத்திரமல்ல எதிர்கால சந்ததியும் இன்று வாழும் அறிவியல் சமூகத்தின் மீது எதிர்காலத்தில் இத்தகைய கேள்வியை கேட்டு குற்றத்தை சுமத்தக்கூடாது என்பதனாலேயே இந்தக் கேள்வியை தமிழ அரசியல் தலைமைகள் மீது முன்வைக்கிறோம்.
அரசறிவியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் ஈழத் தமிழர்களின் அரசியலை அவதானிக்கின்ற போது எதிரிகளினால் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீதானே இனப்படுகொலை வாயிலாகத் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்க்கான ஆயுதப் போராட்டத்தை தோற்கடிக்கப்பட்டமை என்பது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஓர் இராணுவதோல்வி.
ஆனால் அதன் பின்னான கடந்த 16 ஆண்டுகால மிதவாத அரசியல் தலைமைகளினது எதனையும் சாதிக்காத, எதனையும் பெறாத தமிழ் மக்களுக்கு எந்த நலம் பயக்காத அதே நேரம் சிங்களத்திற்கு சேவகம் செய்யவல்ல அரசியலானது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அரசியற் தோல்வியாகவே அமைந்துள்ளது.
முன்னோக்கிச் செல்லும் சிங்கள அரசியல்
இந்த அரசியல் தோல்வியை தமது தோல்வி என்று அறியாமலே தமது பொறுப்பு என்பது உணராமலே தமிழ அரசியல் தலைமைகள் தமக்கிடையே குடும்பி சண்டையில் ஈடுபடுகின்றனர்.
எந்த இதமான குற்ற உணர்வற்று, பொறுப்புணர்ற்று ஊடகங்களில் வீர தீர கதை பேசுகின்றனர், இந்த வாயால் வீர தீர கதை பேசும் அரசியல் தலைமைகள் முதலில் தங்கள் கடந்த கால அரசியலில் தாம் எதனைப் பெற்றுக் கொண்டார்கள்? எதனை சாதித்தார்கள்?
தமிழ் மக்களுக்கு அதனால் அடைந்த நன்மை என்ன? என்ற இலாப நட்ட கணக்கை முடிந்தால் வெளியிட்டு காட்டுங்கள்.
மாறாக காகம் பனை ஓலையில் இருக்கும்போது பனம்பழம் விழுந்தார்கள் காக்க தான் குந்தியதனால்தான் பனம்பழம் விழுந்தது என்று உரிமைகொண்டாடுவதுபோல தமிழ அரசியல் தலைமைகள் காணி விடுவிப்பு என்றும், அரசியல் கைதிகள் விடுவிப்பு என்றும் வாய்க்கு வந்தபடி உளராமல் இதய சுத்தியுடன் நேர்மையான ஒரு அரசியல் இலாப நட்ட கணக்கை வெளியிட வேண்டும்.
இனப்படுகொலை மூலமான இராணுவ வெற்றி மமதையில் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் சிங்கள இனத்தின் மீது கை வைத்ததன் வெளிப்பாடு சிங்கள தேசத்தில் அரகலய என்ற ஒரு ரத்தம் சிந்தா கிளர்ச்சி ராஜபக்ச குடும்பத்தை அரசியலில் இருந்து துரத்தி ரணில் விக்ரமசிங்காவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தது.
ஆயினும் அரகலய போராட்டத்தின் விளைவுகளின் தொடர் விளைவு சிங்கள தேசத்தின் ஆட்சி அதிகாரத்தில் இடதுசாரிகளை ஏற்றிவைத்து விட்டது.
அது சிங்கள தேசத்தில் நிகழ்ந்த புரட்சியாக இன்று பதிவாகிவிட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட்டு அதன் விளைவு நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்கள் பெருவெற்றியை சாதித்துக் கொண்டனர்.
சிங்களதேசம் காலத்தின் தேவைக்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் தம்மை புதுப்பிக்கவும் பழையவற்றை புறந்தள்ளவும் தயாராக உள்ளது.
இதனால்தான் சிங்கள தேசத்தின் அரசியல் முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. 2010ஆம், 2015ஆம், 2020ஆம், ஆண்டுகளுக்கான ஜனாதிபதித் தேர்தல் காலங்களின் போதெல்லாம் ஒரு தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கருத்து மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட போதிலும் அது புறம் குடத்த தண்ணீராய் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு வந்தது.
தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி
ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் தமக்கென ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்தி இனவாதத்துக்கு எதிரான தமிழ் தேசியத்துக்கான தமது வாக்குகளை ஒன்று திரட்டி அளிக்க வேண்டும் என்ற கருத்து அரசியல் அறிவியல் ரீதியாக முற்றிலும் புத்தி பூர்வமானதது என தமிழ் மக்கள் மத்தியில் இறங்கி ஒரு பகுதியினர் கடமையாக உழைத்ததன் பலாபலனாய் ஒரு பொது வேட்பாளரை முன் நிறுத்த முடிந்தது.
ஆயினும் அதற்கு எதிராக தமிழ் தேசிய அரசியலின் பிரதான கட்சியான தமிழரசு கட்சி எதிராகவே செயல்பட்டது.
தமிழர் தேசத்தில் ஆயிரம் விகாரைகளை கட்டுவோம் என்று அழகுகள் விடுத்த சஜித் பிரேமதாசாவை ஆதரித்தது என்பது தமிழ் மக்களின் கையைக் கொண்டு தமிழ் மக்களின் கண்ணை தமிழரசு கட்சியினால் குத்த வைத்த சிங்களத்தின் ராஜதந்திர வெற்றியே.
இவ்வாறுதான் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் இரத்தம் காய்வதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் இனப்படுகொலை புரிந்த இராணுவத் தலைமைத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து தமிழ் தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி வாக்களிக்க வைத்தனர்.
இத்தகைய ஒரு ஈனச் செயலை இத்தகைய ஒரு வரலாற்று துரோகத்தை செய்த சம்பந்தனை யாழ்ப்பாணத்தில் அவருடைய மரண வீட்டுக்கு யாரும் செல்லாமல் புறக்கணித்து தண்டித்தனர் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிங்கள அரசியலில் அவர்கள் தம்மை புதுப்பித்தும் சீரமைத்தும் புதிய மாற்றங்களுக்கு உட்படுகின்றனர் ஆனால் தமிழ அரசியல் பரப்பில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை அந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு இந்த அரசியல் தலைமைகள் தயாராகவும் இல்லை.
வளர்ச்சி என்பது மாற்றங்களினாலே நிகழ்கிறது. மாற்றங்களிலேயே வளர்ச்சி இல்லை அரசியலும் சமூகமும் மாறியே தவிர மாறலியல்ல.
தமிழ் மிதவாத அரசியல் மாறிலியாக இருக்கும் வரை தமிழ் மக்களின் அரசியலுக்கு விமோசனமும் இல்லை விடுதலையும் இல்லை ஜனநாயக செயற்பாடும் இல்லை.
தமிழ் அரசியல் தலைமைகளின் தான்தோன்றித்தனமான அதிகாரமே தமிழ அரசியலில் தொடர்கதையாக அமையும்.
இந்த நிலை மாற வேண்டுமானால் தமிழ் அரசியல் பரப்பின் லாப நட்ட கணக்கு பார்க்கப்பட வேண்டியது அவசியமானது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போர்வலி தந்த பெருவலியை, சொல்லொணாத் துன்பத்தை தமிழ் மக்கள் சுமந்து நின்ற நிலையில் தமிழரின் இலட்சியப் பாதையில் பெரும் இடைவெளி ஒன்று ஏற்பட்டிருந்தது.
எனினும் அந்த இடைவெளியை விடுதலைப் புலிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள் என்று சொல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தலைமைத்துவத்தை சக்தி நிரப்பும் என தமிழ் மக்கள் மாமலையாக நம்பியிருந்தனர்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எதையுமே செய்யாமல் தேர்தல் வருகின்ற போது மாத்திரம் தலைவரால் கைகாட்டப்பட்டவர்கள் நாம்தான் என மரபுதட்டி விடுதலைப் போராட்ட பாடல்களை ஒலிபெருக்கியில் ஒளிபரப்பி வாக்கு பிச்சை எடுக்கும் அரசியலையே இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த அனைத்து தரப்பினரும் கையாண்டனர்.
தனி உரிமை கொண்டாடி
இப்போது அதனை தலைவர் காட்டிய சின்னம் வீடு என்று தமிழரசு கட்சி தனி உரிமை கொண்டாடி மார்பு தட்டி வாக்கு பிச்சை எடுக்கிறது.
இப்போது தமிழரசு கட்சி அலைமோதும் வாக்குப் பிறழும் அரசியல் தலைமைகளினால் வழிநடத்தப்படுகிறது. அது ஜனநாயக சூழலில் சட்டப் பயங்கரவாதத்தை மேற்கொண்டு தமிழ் தேசியம் சார்ந்தவர்களை முடக்கவும் தமிழ் தேசிய ஒருமைப்பாட்டை தடுக்கவும் தமிழ் தேசியக் கட்டுமானங்களை செய்ய விடாது தடை தடுப்பதுமான நாசக்கார செயல்களிலேயே ஈடுபட்டிருக்கிறது.
இந்த நாசக்கார கேள்விகள் எதிரிக்கு சேவகம் செய்வது என்பதை கூட அறியாமல் தாம் தான் தமிழ் அரசியல் தலைமைகள் என்று மார்பகட்டித் திரிகிறது.
இவர்கள் உண்மையில் தமிழ் மக்களுடைய தேசிய நலனையும் தேசிய அபிலாசையையும் கருத்தில் கொண்டு தனிமனித கதிரை ஆசையை துறந்து , திறந்த மனதுடன் மக்களுக்கான சேவையை செய்ய நினைத்திருந்தால் தமிழ் மக்களை ஒன்று திரண்ட சக்தியாக திரட்டி ஒரு தமிழ் தேசியக் கட்டுமானத்தை கட்டியிருக்க முடியும்.
அந்தக் கட்டுமானத்திலிருந்து கொண்டு தமிழ் மக்களின் இறைமையை மீட்பதற்கான பல வழிகளை திறந்து இருக்கவும் முடியும். 2009 ஆண்டின் பின்னான காலகட்டத்தில் பதவியிலிருந்த ராஜபக்சக்கள் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க் குற்றம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை போன்ற சிக்கல்களுக்குள் மாட்டப்பட்டிருந்த காலம்.
அது தமிழர்களுக்கு ஒரு நீதியைப் பெற்றத்தக்க வாய்ப்புள்ள காலமாகவும் காணப்பட்டது. ஆனால் இத்தகைய நல்ல தருணத்திற்தான் 2015 இல் பொதுத் தேர்தல் வந்தது தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவோம், போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் சிங்களத் தலைவர்களையும், இராணுவ அதிகாரிகளையும் ஏற்றுவோம் என முழக்கமிட்டு தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை பாதுகாத்து தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுத்தருவர் என்று மக்கள் நம்பினார்கள்.
அதுபோலவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் செயலாளர் மாவையும் தைப்பொங்கலுக்கு தீர்வுத்திட்டம் ,புது வருடத்திற்குத் தீர்வு ,இந்த வருட இறுதிக்குள் தீர்வு என்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் பல தடவை முன் வைத்து விட்டார்கள் .
ஆனால் நடந்தது ஒன்றும் இல்லை. மாறாக தீய சக்திகள்தான் கட்சிக்குள் ஆழஅகல வளரத்தொடங்கி கூட்டமைப்பு உடைக்கப்பட்டது தான் இறுதியில் நடந்த ஏறியது.
போர்க்குற்ற சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவதற்கு பதிலாக போர்க்குற்றம் புரிந்த தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கு" பீல்ட் மார்ஷல் " பட்டத்தைப் பெற்றுக் கொடுக்கும் பெரும் சாதனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவமானகரமான சாதனையாக நிறைவேற்றியது.
"புதிய அரசியலமைப்பு வராவிட்டால் நான் பதவி விலகுவேன்" என்று சுமந்திரன் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளுக்கு பேட்டியும் வழங்கினார்.
இவ்வாறு கூட்டமைப்புக்குள் இருக்கின்ற சில வாய்வீச்சு அரசியல்வாதிகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான வஞ்சின வார்த்தைகளை பல சந்தர்ப்பங்களில் பொது வெளியில் ஆக்ரோசமாக வெளியிட்டனர்.
நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ தமிழ் தலைவர்கள்
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இது நடக்காவிட்டால், இது நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுவேன் என வஞ்சினம் கூறுவார்கள். ஆனால் வாயிலிருந்து வந்த வஞ்சினம் நெஞ்சில் இருந்திருக்க வில்லை.
மாறாக இந்த வசனங்கள், வஞ்சினங்கள் மக்களுக்கு வஞ்சகம் செய்யவே பயன்பட்டது. 2015 வரை ராஜபக்சக்களை போர்க்குற்ற விசாரணையில் மாட்டுவோம் அவர்களை கூண்டில் நிறுத்தவும் என்றெல்லாம் கூறி காலத்தை கடத்தியவர்கள் தொடர்ந்து மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை தந்தவர்கள் பின்பு 2015 தேர்தலில் மீண்டும் பழைய பல்லவி ஒன்றை தொடங்கினர்.
"சிங்கள ஆளும் வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்தனர். இவர்கள் அமைத்த நல்லாட்சி அவர்களுக்கு நல்ல ஆட்சியாக இருந்தது. ஆனால் அது தமிழ் மக்களுக்கு இனகொலை ஆட்சியாக மாறியது.
மாறாக சிங்கள தேசம் சர்வதேசப் பரப்பில் ஒவ்வொரு தடவையும் ஐநா மனித உரிமை ஆணையத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் பேரினவாத அரசு காலத்தை கடத்திக் கொண்டிருக்க அந்த பேரினவாத அரசாங்கத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முண்டு கொடுத்து ஒவ்வொரு தடவையும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்து கொண்டிருந்தது.
தமிழ் மக்களின் வாக்குகளை கொண்டு தமிழ் மக்கள் மக்களின் கண்களை குத்தி தமிழ் மக்களை குருடாக்கி விடும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு கூட்டமைப்பினர் துணை போயினர்.
நல்லாட்சி அரசாங்கத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு ஒரு குண்டுமணியை தானும் பெற்றுக்கொடுக்க இந்த கூட்டமைப்பால் முடியவில்லை.
இறுதியில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் திரு. சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டது என்று ஒரு பெரும் பொய்யை மேடையில் அடித்துக் கூறினார்.
அதற்கு ஆதாரமாக ஒரு காகிதக் கட்டை விசாரணை அறிக்கை என்று கூறி யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியற்துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கத்தின் கையில் கொடுத்தார்.
இது எத்தனை பெரிய ஏமாற்று. ஆனால் இன்று அதே சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற கு விசாரணை நடத்த வேண்டும் என்று மேடைகளில் முழங்கும் சுமந்திரன் சிவஞானம் போன்றவர்கள் போர் குற்ற விசாரணைக்கான மகஜர் கையளிப்பில் கையெழுத்திட மறுக்கின்றனர் என்பதை இவர்கள் யார் பக்கம் என்பதை தெளிவாக காட்டுகிறது.
மதபோதகர் வேதம் ஓதுவார். ஆசிரியர் அறிவு புகட்டுவார். வேடர் வேட்டையாடுவார். இடையர் மந்தை மேய்ப்பார். இறைச்சிக் கடைக்காரர் பிராணி வெட்டுவார்.
தமிழின எதிரி தமிழினத்தை அழிப்பதற்கான தன் தொழில் செய்வார். இந்த வகையில் சிங்களத் தலைவர்கள் தமிழின இனவழிப்பு தொழிலை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள்.
ஆதலால் தன் தொழில் புரியும் , இனப்படுகொலை புலியும் சிங்கள தலைவர்களைப்பற்றி குறை சொல்வதற்கு அப்பால் நீண்ட பண்பாட்டு வளம் மிக்க தமிழ் தேசிய இனத்தை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பை தமிழ் தலைவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும்.
உண்மையான நடைமுறை அர்த்தத்தில் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ தமிழ் தலைவர்கள் சிங்கள ஆட்சியாளர்களின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு துணை போனவர்களாக இனப்படுகொலையின் பங்குதாரர்களாக காணப்படுகிறார்கள் என்று வரலாறு அவர்களை எப்பொழுதும் வசைபாடும்.
இத்தகைய வசை பாடல்கள் இருந்து தம்மை மீட்கவும் தம்மைத் தாமே சுய பரிசீலனை செய்து கொண்டு தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தமிழ் தலைமைகளின் என்று குறிப்பிடப்படுகின்ற அனைவரும் கடந்த 16 ஆண்டு கால அரசியல் லாப நட்ட கணக்கெடுப்பை எடுத்து மக்கள் முன் வைப்பதோடு அதிலிருந்து புதிய ஒரு அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் என வரலாறு நிர்பந்திக்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 02 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



