பிள்ளைகளுக்கு உடல்ரீதியான தண்டனை : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிக்கை
பிள்ளைகளுக்கு உடல்ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவையின் (பிரிவு 19) முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்ற போதிலும், அது ஒரு கலந்துரையாடலாகவே இருந்ததாகவும், சட்டமாக நிறைவேற்றப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திருத்தம் சட்டமாக நடைமுறைக்கு வர வேண்டுமானால், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையிலும் அதற்குரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உடல்ரீதியான தண்டனை
அத்தகைய மாற்றம் இன்னும் செய்யப்படாததால், இந்தச் சட்டமூலம் நிலுவையிலேயே உள்ளது.
நாடாளுமன்றத்தின் குழுநிலை விவாதத்தின் போது இந்தச் சட்டமூலத்தில் மாற்றங்களைக் கொண்டு வர இன்னும் வாய்ப்புள்ளதாகவும், திருத்தங்களை முன்மொழிய முடியும் எனவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
எனவே, உடல்ரீதியான தண்டனை தொடர்பான திருத்தம் விவாத கட்டத்திலேயே உள்ளதாகவும், அது இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை எனவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



