திலீபனின் சிலை விவகாரம்.. அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள்..
நல்லூர் முன்றலில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் சட்ட ரீதியான விளக்கத்தை அரசாங்கமும் பொலிஸாரும் உடனடியாக வழங்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயகுமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், நல்லூர் முன்றலில் தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த அவரது சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெளிவான விளக்கம்..
இந்த சிலை அகற்றப்பட்டமைக்கான சட்டப்பூர்வ காரணம் என்ன? எந்த சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? யாருடைய உத்தரவின் பேரில் சிலை அகற்றப்பட்டது? என்பன தொடர்பில் அரசாங்கமும் இலங்கை பொலிஸாரும் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.

இது ஒரு சிலையை அகற்றியமை என்ற ஒரு தனிப்பட்ட விடயமாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. இது இறந்தவர்களை நினைவுகூருதல், வரலாற்றை பதிவு செய்தல், ஒரு சமூகத்தின் நினைவுகளைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு அந்த வரலாற்றை எடுத்துச் செல்லுதல் போன்ற அடிப்படை சமூக மற்றும் மனித உரிமை கேள்விகளுடன் தொடர்புடைய விடயமாகும்.
இலங்கை அரசியலமைப்பின் கீழ் சமத்துவம், கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை மற்றும் கலாசாரத்தை அனுபவித்து மேம்படுத்தும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த உரிமைகளுக்கு சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளும் உள்ளன. எனவே, எந்த நினைவுச் சின்னம் அல்லது நினைவேந்தல் நிகழ்வாக இருந்தாலும், சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதில் ஷிரந்தி ராஜபக்சவிற்கு சிக்கல் - FCIDக்கு அவசர கடிதம்