அரசியல் நோக்கங்களுக்காக நினைவுகூரப்படும் போராளிகளின் நினைவு நாட்கள்! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் ஆதங்கம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அரசியல் கட்சிகள் எந்தவிதமான இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் தினங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (13.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திலீபன் அண்ணனுடைய 39வது நினைவு நாளை நாங்கள் அண்மித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே 1987ஆம் ஆண்டு திலீபன் அண்ணன் மேற்கொண்ட இந்த அகிம்சை வழி போராட்டத்திலே அவர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். எமது விடுதலைப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலே அமைதிப் படையாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது தாயக நிலப்பரப்புக்கு இந்திய இராணுவம் வந்தது.
உண்ணாவிரத போராட்டம்
அந்த காலப்பகுதியிலே தான் எங்களுக்கான ஒரு மிக மோசமான ஒரு நிலைமை இங்கே ஏற்பட்டது. அமைதி காக்க வந்த அந்த இந்திய இராணுவத்தினர் மாறாக அடக்குமுறைகளை இங்கே எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டபோதுதான் திலீபன் அண்ணன் அவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
12 நாட்கள் உணவின்றி, நீரின்றி அவருடைய போராட்டம் தொடர்ந்தது. திலீபன் அண்ணனுடைய வீர வரலாறுகள் தொடர்ச்சியாக இங்கே மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கின்றோம். ஏனென்றால் இந்த விடயங்கள் அனைத்துமே நாங்கள் ஒரு இந்திய அரசாங்கத்துக்கு எதிராகவோ இந்த கருத்துக்களை நாங்கள் முன்வைக்கவில்லை.

எமது விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றின் ஒரு பகுதி. அந்த பகுதியை வந்து எதிர்கால சமூக சந்ததியினருக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும், அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் எதிர்காலத்தில் இந்த மண்ணை ஆளப்போகின்றார்கள். அப்ப அவர்களுக்கு அந்த விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த கருத்துக்களை இந்த இடத்தில் நாங்கள் முன்வைக்கின்றோம்.
வரலாற்று நிகழ்வுகள்
எதிர்வருகின்ற 39வது நினைவு நாளை கட்சி பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, பெரும் எழுச்சியோடு நாங்கள் இந்த நினைவு நாளை நாங்கள் நினைவு கூர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த வரலாற்று நிகழ்வுகள் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள், ஒரு அரசியல் நோக்கங்களுக்காக செய்ய முடியாது. நாங்கள் அதனை அனுமதிக்கவும் முடியாது.
இன்றைக்கு பார்க்கப்போனால் தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சிகளுடைய தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராளிகளுடைய நினைவு நாட்களை நினைவு கூருவது இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.
மாவீரர் துயிலுமில்லங்களாக இருந்தாலும் சரி, போராளிகளுடைய வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களுடைய நினைவாலயங்கள் இருந்தாலும் சரி, அந்த நினைவு நாட்கள் என்பது அரசியல் சார்ந்த விடயங்களாகவே இங்கே நினைவு கூரப்படுவதை அதிகமாக எங்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.