ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்
2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை வெளிவராததாகக் கூறப்படும் பல்வேறு தகவல்களை ஊடகவியலாளர் நீராஜ் டேவிட் வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், நற்கருணை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், வழிபாட்டுத் தலத்தையே இலக்காகத் தேர்ந்தெடுத்ததன் ஊடாக பொதுமக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் படுகொலைக்கு கருணா குழுவினர் மாத்திரமே காரணம் என பொதுவாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமது தகவல்களின் அடிப்படையில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் தொடர்புபட்டிருந்ததாக நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கருணா குழு, ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு இதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவாலயத்தின் வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் நள்ளிரவுத் திருப்பலி நடைபெறும் நேரம் உள்ளிட்ட விடயங்களை அறிந்துகொள்வதற்காக கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட மூவர் அந்தக் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தப் படுகொலைக்கான தயாரிப்புகள் மற்றும் அதில் பங்கேற்றதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில், அக்குழுவில் பணியாற்றிய ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருந்து தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
இந்தப் படுகொலை தொடர்பான மேலும் பல நேரடி அனுபவங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் வெளியிடவுள்ளதாகவும் நீரஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துவருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...