ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் என்ன நடந்தது! சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்
ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவத்தில், அவர் தாக்குதலுக்கு உள்ளானதால் ஏற்பட்ட காயங்களே மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் நம்புவதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (SDIG) சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
எனினும், மரணத்திற்கான சரியான காரணத்தையும், சம்பவத்தின் பின்னணியையும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனை
சந்தேகநபரின் உடலில் மூன்று விலா எலும்புகள் முறிந்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டிருந்தமை மற்றும் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான தகவல்களும் விசாரணைகளில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சந்தேகநபர் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஆரம்பத்தில் துவிச்சக்கரவண்டியில் இருந்து விழுந்ததால் காயமடைந்ததாகக் கூறியுள்ளார்.
தனித்தனியான விசாரணைகள்
ஒக்டோபர் 24ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர், மருத்துவ அனுமதியின்றி அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், பொலிஸ் காவலில் அவர் உயிரிழந்தமை தொடர்பிலும் தனித்தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட ஆரம்பத்தில் பாரதூரமான உடல்நலப் பாதிப்புகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பின்னர் பொலிஸ் அறையில் இருந்தபோது அவர் உடல்நலக் குறைபாட்டுக்கு உள்ளானதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கட்டாய நடைமுறை
சந்தேகநபரைக் கைது செய்யும் போது அவரது உடல் நிலையைப் பதிவு செய்தல், உரிய ஆவணங்களைப் பராமரித்தல், விசாரணைகளின்போது நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் அவரது உறவினர்களுக்குத் தகவல் வழங்குதல் உள்ளிட்ட கட்டாய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த ஹோமாகம பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி, பின்னர் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் விசாரணைகள் முடிவடையவில்லை எனத் தெரிவித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டாரா என்பதையும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தையும் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்திலிருந்து நாமல் தப்பியது எப்படி..! விசாரணையில் அம்பலமான சட்ட நகர்வுகள்
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam