இஸ்ரேல் வேலைவாய்ப்பில் புதிய கட்டுப்பாடு! இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெறும் இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்வது, 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் (G-to-G) ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலிய அரசாங்கம் புதிய கொள்கைத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு
இதற்கமைய, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொடுக்கும் தற்போதைய ஆட்சேர்ப்புத் திட்டம், 2026 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும்.
கட்டுமானம், கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வேலைத்துறைகளுக்கும் இந்தப் புதிய கொள்கை பொருந்தும். இதற்கு முன்னர், இத்துறைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், 2027ஆம் ஆண்டுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடைமுறை, ஆட்சேர்ப்பு ஒதுக்கீடுகள் மற்றும் தெரிவு முறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவிக்கும் தனியார் முகவர் நிலையங்கள் மற்றும் தனிநபர்களின் வாக்குறுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வேலைதேடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறும் எந்தவொரு தனிநபருக்கும் அல்லது உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கும் பணம் செலுத்த வேண்டாம் எனவும் பணியகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அடுத்தகட்ட உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் வரை, தனியார் முகவர் நிலையங்களால் ஏற்பாடு செய்யப்படும் திறன் பரிசோதனைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் ஏனைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் நம்புமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக ஏற்கனவே சட்டபூர்வமாகப் பணம் செலுத்தியவர்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை எனப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் தொடர்பான விபரங்களை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களிடம் கோரியுள்ளதாகவும், அந்த விபரங்கள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரச்சினைகள்
தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது விபரங்களைத் தனியாகச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், மேலதிக அறிவுறுத்தல்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பணியகம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், மோசடிகள் அல்லது ஏனைய குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விரும்புவோர், பணியகத்தின் தற்போதைய முறைப்பாட்டுப் பொறிமுறையின் ஊடாகத் தொடர்ந்து முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் மற்றும் தொடர்புடைய இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri