இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை தட்டிச் சென்ற இந்திய மகளிர் அணி
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இந்திய அணி
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைச்சதங்களைப் பதிவு செய்தனர். ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 129 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினர்.
இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளிகளில் வீழ்த்தப்பட்ட நிலையில், இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆசியக் கிண்ண வரலாறு
இதன் காரணமாக இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் போனதுடன், 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்திருந்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி குறிப்பிடத்தக்க மீள்வெற்றியாக அமைந்துள்ளது.

மேலும், இறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்த ஷபாலி வர்மா, மகளிர் T20 ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார். அவர் வெறும் 24 பந்துகளில் அரைச்சதத்தை எட்டினார்.
அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் சிறப்பான பந்துவீச்சுடன் இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, ஆசியக் கிண்ணத்தை கம்பீரமாகக் கைப்பற்றியுள்ளது.