கொழும்பில் பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! அழகுசாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான அறிவுறுத்தல்
அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலாவதியான அழகுசாதனப் பொருட்கள், விற்பனை விலை குறிப்பிடப்படாத நறுமணப் பொருட்கள் மற்றும் உரிய விபரங்களற்ற பூச்சு வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 5) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.

உச்ச சில்லறை விலை குறிப்பிடப்படாமல் நறுமணப் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான அழகுசாதன பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உரிய உற்பத்தி விபரங்களன்றி அழகுசாதனப் பொருட்களை காட்சிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்திற்கு எதிராகச் சுமத்தப்பட்டன.
அபராதம் விதிப்பு
அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது, குற்றச்சாட்டுகள் மூன்றையும் குறித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் கொள்வனவு செய்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.