அரச சேவையில் தலையீடுகள் இருக்காது: ஜனாதிபதி உறுதி
அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று (05.11.2024) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்குப் பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேவையற்ற செலவுகள்
அத்துடன், அரசின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுகின்றது எனவும், நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசின் முக்கிய பணி எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதேச அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் சேவைகளைக் குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |