அமெரிக்க - சீன ஜனாதிபதிகளின் பெய்ஜிங் சந்திப்பு ஒத்திவைப்பு
பரபரப்பான சர்வதேச அரசியல் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் இடையிலான பெய்ஜிங் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் உடனான போர் பதற்றம் மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ட்ரம்ப்பின் உலகளாவிய வரி விதிப்பு கொள்கைகளை இரத்து செய்துள்ள சூழல், இந்த முக்கிய சந்திப்பைத் தாமதப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரான் மீதான போர் முனைப்பு
முன்னதாக, பாரிஸில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்த நிலையில், அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு வர்த்தக உறவுகளை மறுசீரமைப்பதில் ஒரு தற்காலிகத் தடையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, விவசாயப் பொருட்கள் கொள்முதல் மற்றும் அரிய வகை தாதுக்கள் பரிமாற்றம் குறித்து இரு நாடுகளும் இணக்கமான நிலையை எட்டியிருந்த வேளையில், இந்த காலதாமதம் சீனாவின் கணக்கீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என ஷங்காய் புடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச உறவு நிபுணர் ஜாவோ மிங்ஹாவ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், சீனாவின் 'சீனா டெய்லி' நாளிதழ், சீனாவின் திறந்த மனப்பான்மையை அமெரிக்கா பலவீனமாக எண்ணிவிடக்கூடாது என்றும், ஒருதலைப்பட்சமான விசாரணைகள் அல்லது கட்டுப்பாடுகள் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு சட்டச் சிக்கல்கள் மற்றும் ஈரான் மீதான போர் முனைப்பு ஆகியவை உலக பொருளாதாரத்தின் இரண்டு மிகப்பெரிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் ஒருவித நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.