இரவில் வீட்டிற்குள் புகுந்து உறங்கிய மர்ம நபர்.. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
மொனராகல - ரத்தனபிட்டிய பகுதியில் வீடொன்றுக்குள் திருடும் நோக்கில் நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பின்னர் அங்கிருந்த கட்டிலில் அயர்ந்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், எதையோ காரணமாகக் கொண்டு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.
மறுநாள் அதிகாலை வீட்டார் எழுந்து பார்த்தபோது, தங்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒருவர் வீட்டின் கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதையடுத்து உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையின்போது, 'தற்செயலாக நித்திரை வந்ததால் கட்டிலில் தூங்கிவிட்டேன்' என அவர் வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டதால் சுமார் 10,000 ரூபாய் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருளும் திருடப்படவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.