மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் கைது
மட்டக்களப்பில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து வீட்டிற்குள் உள்நுழைந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே பொதுமக்கள் மடக்கி பிடித்து இன்று(02) அதிகாலை 2 மணிக்கு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று(1) இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில் அதிகாலை 2 மணிக்கு வீட்டினுள் சத்தம் ஒன்று கேட்டதையடுத்து வீட்டு உரிமையாளர் விழித்து கொண்டுள்ளார்.
கொள்ளை சம்பவம்
வீட்டு உரிமையாளர் பின்னர் எழுந்து சத்தம் இன்றி அவதானித்த போது இளைஞர் ஒருவர் வீட்டினுள் இருப்பதைக் கண்டுள்ளார். இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த போது அயலவர்களின் உதவியுடன் சுற்றிவழைத்து மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்துள்ளார்.
இதனையடுத்து மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வேறு கொள்ளைகள்
குறித்த இளைஞர் கிழக்கில் பல கொள்ளைகளுடன் தொடர்புடைய அம்பாறை - இறக்காமத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் திருகோணமலை, மட்டக்களப்பு , கல்முனை உட்பட பல பிரதேசங்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 20 க்கு மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி கடை ஒன்றை உடைத்து அங்கிருந்து 75 க்கு மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுள்ளார்.
இதனையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிருந்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவர் தங்கியிருந்த அறையிலிருந்து 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏ.ரி.எம் வங்கி இயந்திர அட்டைகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.