மதுபான விருந்தில் இலங்கை அணி! இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட கருத்து
புதிய இணைப்பு
இலங்கை அணி வீரர்கள், உலக்கிண்ண போட்டிக்கு முன் மதுபான விருந்தில் கலந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இதனை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.
நியூயோர்க்கில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான இருபதுக்கு 20 போட்டிகளுக்கு முன்பதாக, இலங்கையின் முன்னணி வீரர்கள் ஐந்து பேர் மதுபான விருந்துகளில் ஈடுபட்டதாக முன்னதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இலங்கை கிரிக்கெட் சபை இவ்வாறு கூறியுள்ளது.
மேலும், இந்த குற்றச்சாட்டு, முற்றிலும் தவறானது, புனையப்பட்டது மற்றும் ஆதாரமற்றது என்று இலங்கை கிரிக்கட் சபையும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் காரணமாக, இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்வதற்கும் சரிசெய்வதற்கும், குறித்த குற்றச்சாட்டுக்களை பிரசுரித்த செய்தித்தாள்கள், பதில் கூறுகின்ற உரிமையை வெளியிட வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கட் சபை கோரியுள்ளது.
முதலாம் இணைப்பு
நடந்து முடிந்த இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணியுடனான (South African Cricket Team) போட்டிக்கு முந்தைய இரவு இலங்கை அணியின் (Sri Lankan Cricket Team) சில மேலாளர்கள் மற்றும் வீரர்கள் மதுபான விருந்தொன்றை நடத்தியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அணியின் மேலாளர், 3 முன்னணி துடுப்பெடுத்தாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சகலதுறை வீரர் ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த விருந்து அணியின் உதவி மேலாளரின் அறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுந்த விமர்சனங்கள்
ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறுவதற்கு குறித்த வீரர்கள் எடுத்த முடிவின் விளைவு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அணியின் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊடகங்களிடம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், அணியின் மூத்த ஆலோசகரால் இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் விளையாட்டு, ரசிகர்களால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.
இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வர்ட், தனது ஒப்பந்தத்தை நீடிப்பதை இடைநிறுத்தியுள்ளார்.
உரிய நடவடிக்கைகள்
மற்றுமொரு உப பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸின் ஒப்பந்தமும் இலங்கை அணியின் சரிவின் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை அணியின் சரிவுக்கு அதன் முகாமைத்துவமும் ஒரு காரணியாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே இலங்கை அணி மீது பதிந்துள்ள கரும்புள்ளியை நீக்குவதற்கு முடியும்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |