நிலைமை நலமானதாக இல்லை - மைத்திரியின் செயற்பாடு குறித்து பொதுஜன பெரமுன கருத்து
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அடிப்படையாக கொண்ட கூட்டணியின் தலைவர் ஒருவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்து, கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எம்முடன் இணைந்து பணியாற்றும் கட்சியுடன் இருக்கும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் எப்போதும் வெளிநாட்டு ஊடகங்களில் விமர்சித்தது கிடையாது. நாட்டில் கட்சி ஒன்றுக்குள் இருக்கும் பிரச்சினையை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் கலந்துரையாடுவது எந்த வகையிலும் நன்மையானதாக இருக்காது. இது குறித்து கவலைப்படுகிறோம் என ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்த முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, 2020 ஆம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
“ எமது கட்சிக்கு களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு வேட்புமனுக்கள் கிடைக்கவில்லை. கம்பஹா மாவட்டத்தில் ஒரு வேட்புமனு மாத்திரமே கிடைத்தது. குருணாகல் மாவட்டத்திற்கு இரண்டு வேட்புமனுக்களே கிடைத்தன. நியாயமான வேட்பாளர் எண்ணிக்கை எமக்கு வழங்கப்படவில்லை. நாங்கள் 30 வேட்புமனுக்களை கோரி இருந்தோம். எனினும் அது கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் எமது கட்சியை சேர்ந்த 30 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருப்பார்கள்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடவே நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.எமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். நியாயமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்தால், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதில் சிக்கல் இல்லை. எங்களை அநீதியாக நடத்தினால், தனித்து போட்டியிட எமது கட்சி தீர்மானிக்கும். நாங்கள் இரண்டு மாற்று வழிகளுக்கு தயாராக இருக்கின்றோம்” எனக் கூறியிருந்தார்.