கனடா செல்ல காத்திருந்த இலங்கையர் இருவருக்கு அதிர்ச்சி
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, பணம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பரிசோதகரின் மகன் மற்றும் மேலதிக காணி பதிவாளர் ஒருவரின் கணவர் ஆகியோரிடம் இருந்து தலா 8 லட்சம் ரூபாய் வீதம் பெற்று பண மோசடி செய்த சந்தேக நபர்களை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை தமது உறவினர் ஒருவர் மூலமாகவே அறிந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனடா வேலைவாய்ப்பு
கனடா வேலைவாய்ப்புக்காக செல்லத் தயாராக இருந்த இருவரும், கடந்த வருடம் சந்தேகநபர்களுடன் இணைந்து மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கும் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து தலா 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். மீதிப் பணம் மொனராகலயிலுள்ள சந்தேகநபர் ஒருவரின் வீட்டில் வைத்து பெறப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு மாதங்களுக்குள் கனடாவுக்கு அனுப்புவதாக சந்தேகநபர்கள் உறுதியளித்துள்ளனர்.
2 மாதங்கள் கடந்த பின்னரும் அவர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காது, தொலைபேசியை செயற்படாதவாறு முடக்கியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் எஹெலியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த த சில்வா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.