இலங்கையில் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் குறைந்தபட்ச சம்பளம்!
தனியார் துறை ஊழியர் ஒருவர் மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால், அவருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 30,000 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்துவது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம் என்று வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(07.11.2026) இடம்பெற்ற தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தனியார் துறை உழியர்களின் குறைந்தபட்ச சம்பளம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் உருவாக்கிய அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாட்டில் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது. அடுத்த வரவு செலவுத் திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எமது மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, உழைக்கும் வர்க்கம் தொடர்பாக மேலும் பல கருத்துக்களையும் முன்மொழிவுகளை முன்வைக்க வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த அரசாங்கத்தை நாம் உருவாக்கியது, உழைக்கும் வர்க்கத்தினரைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவுமே ஆகும்.
அதனால், நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் எதிர்கொண்ட பல பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
மறுபுறம், இந்த நாட்டின் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்துள்ளோம். எந்தவொரு இடத்திலும் பணிபுரியும் ஊழியர் ஒருவர், மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்திருந்தால், அவருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடி முடித்துள்ளோம்.
எதிர்காலத்தில் மேலும் சம்பள அதிகரிப்புகள் குறித்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது. அதேபோன்று, ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி(EPF), ஊழியர் நம்பிக்கை நிதி(ETF) உள்ளிட்ட நிதிகளின் பாதுகாப்பு மட்டுமன்றி, உழைக்கும் வர்க்கத்தினர் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்தும் நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS