ஜனாதிபதி தேர்தல் கொதிநிலை : பகுதி 2
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என செய்தி வெளியாகிவிட்டது. மறுபுறத்தில் தமிழ் சிவில் சமூகமும், தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து பா.அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராக இன்று அறிவித்துவிட்டனர்.
இப்போது இலங்கை தீவின் ஜனாதிபதி தேர்தல் என்பது தமிழ் தேசியம் என்கின்ற பரப்பு ஒருபுறமும், மறுபுறத்தே சிங்கள இனவாத தேசியவாத சக்திகள் தமக்குள்ளும் தமிழர்களுடனும் மோதும் களமாக மாற்றிவிட்டது.
ஆயினும், சிங்கள தரப்பினர் பௌத்த பேரினவாதத்தின் மூலம் வாக்குகளை குவிக்கவே முற்படுவர். இது இவ்வாறு இருக்கையில் தேர்தல் ரீதியான அரசாங்கம், அரசியலமைப்பு அரசாங்கமும் அமைய வேண்டும் என்றும் அதில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தலைவராகத் தான் இருக்க வேண்டும் என்பதுவே ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு.
தென்னிலங்கை அரசியல்
அதுவே தனக்கு கௌரவம் என்பதுவே அவருடைய நிலைப்பாடுமாகும். அதனால் தான் ராஜபக்சக்களின் எல்லா வகையான நிபந்தனைகளுக்கும் அவர் கட்டுப்படாமல் சற்று இறுக்கமாக இருப்பதாக தோன்றுகிறது. தனது பிடிமானத்தை இறுக்கமாக வைத்திருப்பதன் மூலம் ராஜபக்சக்கள் சற்று இறங்கி வருவதற்கான சூழல்களை அவர் தோற்றுவித்திருக்கிறார்.
ஆனால் ராஜபக்சக்கள் ரணிலை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காகவே நாமல் ராஜபக்சவை களம் இறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அது ஊடகங்களில் பெரும் பிரச்சாரமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இன்று ராஜபக்சக்களுக்கு எதிரான சர்வதேச சூழல் இருக்கும் நிலையில் இத்தகைய ஒரு முடிவை ராஜபக்சக்கள் தந்துரோபாய ரீதியில் எடுத்தார்களே அன்றி உண்மையில் நாமல் ராஜபக்ச தேர்தல் களத்தில் நிற்பதற்கான சாத்தியங்கள் மிக அரிது.
எனவே ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி நாமலை முன்மொழிவதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு ஒரு உடன்பாட்டை எட்டிவிடுவார்கள். இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து பின்வாங்கி ரணிலுக்கு ஆதரவு அளிக்கும்படி இவர்கள் வேண்டுவார்கள் என்பதுதான் ராஜதந்திர ரீதியில் அவர்களுக்கு நலனைப் பயக்கும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் தேர்தல் களத்தில் பல்வகையான நாடகங்கள் ஆடப்படும். கடந்த உள்ளக ஜனாதிபதி தேர்தலிலும் இவ்வாறுதான் அவர்கள் அழகப்பெருமாவை தங்கள் சார்பில் நிறுத்திவிட்டு ரணிலுக்கு வாக்களித்து சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மொட்டு கட்சியினர் தமது தரப்பில் நாமல் ராஜபக்சவை சாக்குப் போக்குக்காக இப்போது நிறுத்துவதாக அறிவித்தமை என்பது தமது கட்சியின் கட்டுக்கோப்பை தக்க வைக்கவும், கட்டுக்குலையாமல் இருப்பதற்கும் ஒருவரை நிறுத்த வேண்டியது அவசியமாகிவிட்டது. அதேநேரத்தில் எதிர்த்தரப்பில் சஜித் எழுச்சி பெறுவதை தடுக்க வேண்டும்.
சஜித்துடன் ஒருபோதும் இவர்களால் கூட்டு சேரமுடியாது. அவ்வாறு கூட்டுச் சேர்வார்களேயானால் ராஜபக்சக்களின் பரம்பரை அரசியல் முடிவுக்கு வந்துவிடும். எனவே, அதற்கு ஒருபோதும் ராஜபக்சக்கள் இடமளிக்க மாட்டார்கள். அதேநேரத்தில் சரத் பொன்சேகா எழுச்சி பெறுவதையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் ஜேவிபி பற்றி அவர்கள் பெரிதாக ஒருபோதும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் சிங்கள அரசியல் கலாச்சாரத்தில் இடதுசாரிகளுக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினரைக் கொண்ட ஜேவிபியினருக்கும் சிங்கள உயர் குழாத்திலும், அறிவுஜீவிகள் மட்டத்திலும், பௌத்த மத பீடத்திலும் எந்த ஆதரவும் கிடையாது என்பதனால் ஜேவிபி இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.
சிங்கள மக்கள் மத்தியில் ரணில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைத்தவர் என்ற ஒரு கருத்து இல்லாமலும் இல்லை.
கேந்திர முக்கியத்துவம்
ஆயினும் நடைமுறையில் ரணிலினால் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவோ, அபிவிருத்தி செய்யவோ முடியாது. மாறாக வெளிநாடுகளில் இருந்து கடனைப் பெற்று இறக்குமதிகளை செய்து தங்கு தடை இன்றி பொருட்களை மக்களுக்கு வழங்க முடியும். மறுபுறத்தில் இலங்கையின் கடன் தொகை அதிகரித்தே செல்லும்.
மேலும் மேலும் கடனை பெறுவதன் மூலம் இலங்கை அரச கட்டமைப்பையும், அரசாங்கத்தையும் இவரால் குறுங்காலத்திற்கு தக்க வைக்க மட்டுமே முடியும். ஏற்றுமதி நோக்கிய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் வீதிகள், பாலங்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகளை கட்டுவதும், மக்களுக்கான சேவைகளை தங்கு தடை இன்றி வழங்குவதுதான் அபிவிருத்தி. மாறாக கடன் வாங்கி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் அபிவிருத்தியாகாது.
கைத்தொழிற் பண்ட உற்பத்தியை மேற்கொள்ளக்கூடிய அடிக்கட்டுமானங்களை செய்து அதனுாடான உற்பத்தியின் மூலமே அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். "கடன் வாங்கி கட்டப்படும் மாடிவீட்டை விட சொந்த உழைப்பில் கட்டப்பட்ட குடிசை மேலானது" என்ற கூற்று ஒரு நாட்டின் அபிவிருத்தி என்ற சொல்லாடலுக்கு பொருத்தமான பொருளை விளக்கவல்லது.
அதேநேரத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தலை மேற்குலகம் உன்னிப்பாக கவனிக்கும் ஒரு விடயம். காரணம் இலங்கை இந்து சமுத்திரத்தின் முக்கிய கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருப்பதுதான். இந்த அடிப்படையில் இலங்கை அரசானது இயல்பாக சீனச் சார்புடையதாகும் நிலை மேலும் மேலும் வளர்கிறது.
அண்டை நாட்டு ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு "அண்டை நாட்டின் அண்டை நாடு இயல்பான நண்பன் ஆவான்" என்பதற்கு அமைய சீனா இலங்கையின் நிரந்தர நண்பனாகும். இலங்கை அரச கட்டமைப்பின் இரண்டாயிரம் ஆண்டுகால புவிசார் அரசியல் வியூகம் என்பது அண்டை நாடான இந்தியா இயல்பான எதிரியாகவும் அண்டை நாட்டின் அண்டை நாடுகளான சீனா, தாய்லாந்து, பர்மா என்பன இயல்பான நண்பர்களாகவும் அமைந்திருப்பதை காணமுடிகிறது.
இந்த நிலையில் இவை அரசின் விருப்பங்களாக அமையுமே தவிர நபர்கள் சார்ந்ததாக அமைவது அரிது. இங்கே அரசை ஒட்டி செல்லும் அரசாங்கத்தின் தலைவர்களின் விருப்பு வெறுப்பு என்பவற்றுக்கு அப்பால் அரசு ஒரு ஜீவி என்ற அடிப்படையில் அதற்கு இருக்கின்ற சுயநலம் என்கின்ற அடிப்படையில் அது தன்னுடைய நலனை எப்போதும் தக்க வைப்பதற்கு காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் தன்னை சுருக்கியும் விரித்தும் தகவமைத்துக் கொண்டே இருக்கும்.
அது இலங்கை அரசுக்கும் பொருந்தும். இலங்கையை ஆட்சி செய்யும் அரசாங்கங்களுக்கும் பொருந்தும். அரசாங்கத்தை வழிநடத்தும் தலைவர்களுக்கும் பொருந்தும். இங்கே அரசுக்கு உடனடித் தேவை, குறுங்கால தேவை, நீண்ட கால தேவை என முப்பரிமாண காலகட்டத்திலான தேவைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டி உள்ளது.
இந்திய எதிர்ப்பு அரசியல்
எனவே, இலங்கை அரசுக்கு உடனடியாகவும் நீண்ட காலத்திற்கும் அமெரிக்கா சார்ந்த மேற்குலகின் அனுசரணை தேவைப்படுகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவை அண்டி இந்தியாவை சற்று பின்தள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். மேற்குலகமும் ரணிலை வைத்துக்கொண்டு தமது நலன்களை இலங்கை சார்ந்து இந்து சமுத்திரத்தில் கையாள முடியும் என எதிர்பார்க்கிறார்கள்.
எனவே ரணிலுக்கான ஆதரவு மேற்குலகில் உண்டு. அதேநேரம் மேற்குலகை ரணிலால் கையாள முடியும் என்ற நம்பிக்கையும் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு. எனவே ரணிலுக்கான ஆதரவுத் தளம் என்பது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரித்தே உள்ளது. இலங்கையின் சிம்மாசனத்தில் அமர்கின்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்திய எதிர்ப்பு வாதம் என்ற மணி முடியையும், சப்பாத்தையும் அணிந்து சிம்மாசனத்தில் வீற்றிருப்பர்.
இதுதான் இலங்கையின் அரசியல் கலாச்சாரம். இதனை யாராலும் மாற்றமுடியாது. இலங்கையின் சிம்மாசனம் என்பது இந்திய எதிர்ப்பு வாதத்தால் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய எதிர்ப்பு வாதம் இல்லாத எந்த கொம்பனாலும் அந்தச் சிம்மாசனத்தில் அமரவே முடியாது. இந்த நிலையில் இந்திய தரப்பினரை பொறுத்த அளவில் அண்டை நாடு என்ற அடிப்படையில் அவர்களுக்கு எந்தத் தெரிவும் கிடையாது.
இந்தியா ஒரு பலமான உபகண்ட அரசு என்ற அடிப்படையில் இலங்கையில் யார் சிம்மாசனத்தில் அமர்கிறார்களோ அவர்களை பயத்தாலும் நயத்தாலும் கையாண்டு அனுசரித்துப் போகவே முற்படுவர். இந்திய ராஜதந்திரிகளினால் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை இன்று வரை சரியாகப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.
இந்தியாவினால் இந்தச் சிறிய தீவை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் கொண்டு வரவும் முடியவில்லை. ராஜதந்திரத்தினால் இலங்கை அரசை இந்திய ராஜதந்திரர்களால் ஒருபோதும் வெல்லப்பட முடியாது. இலங்கை ஆட்சியாளரை இந்தியாவால் ஒருபோதும் திருப்தி படுத்தவும் முடியாது. இந்தியாவிடம் இருந்து எதைப் பெறவேண்டுமோ அதனை இலாவகமாக பெறும் தந்திரம் இலங்கை ராஜதந்திரிகளுக்கு நிறையவே உண்டு.
ஆனால், இந்தியாவின் எதிர்பார்ப்பை அவர்கள் ஒருபோதும் நிவர்த்தி செய்தது கிடையாது. எனவே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவினால் எந்த ஒரு செல்வாக்கையும் செலுத்த முடியாது. அதேநேரம் இந்தியா ஆதரிக்கின்ற எந்த தலைவர் இலங்கை ஜனாதிபதி பதவியில் அமர்ந்தாலும் அவர் அமர்ந்த பிற்பாடு இந்திய எதிர்ப்பாளனாகவே அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.
அதேநேரம் இந்தி எதிர்ப்பு பேசிய தலைவர் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டுவார், உடனடியாக இந்தியாவுக்கு பயணம் செய்வார், இந்தியாவிடம் பெற வேண்டியதை பெற்று வருவார். ஆனாலும் இந்தியா விரும்பிய எதையும் செய்ய மாட்டார் என்பதே உண்மையாகும்.
இந்தியா ஒரு துணை வல்லரசு என்ற அடிப்படையில் தனது சக்தியை பிரயோகித்து அவ்வப்போது தனக்குத் தேவையானவற்றை பெறுவதில் வெற்றி பெறலாம் ஆனால் இலங்கை அரசை ராஜதந்திர ரீதியில் தோற்கடிக்கவோ, வெற்றிகொள்ளவோ ஒருபோதும் முடியாது.
வரலாற்று விதி
அதேநேரம் தமிழ் அரசியல் பரப்பில் சிங்கள தலைவர்களை நம்பி கூட்டுச் சேர்ந்த எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள அரசிடமிருந்து ஒரு உப்புக் கல்லைத் தானும் பெற முடியவில்லை. அது ராமநாதன், மகாதேவா, பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன் வரை தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளையோ நலன்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகால அரசியல் உட்பட தமிழரசு கட்சி சிங்களத் தலைவருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளும், கனவான் ஒப்பந்தங்களும் எதையும் சாதிக்கவில்லை. தமிழ் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றாயினும் கடந்த 76 ஆண்டு கால இணக்க அரசியல் வரலாற்றில் நிறைவேற்றப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் - மைத்திரிபால சிறிசேனவுடன் செய்து கொண்ட கனவான் உடன்படிக்கையை "நான் மையால் எழுதவில்லை இதயத்தால் எழுதியுள்ளேன்" என்று சொன்னார் சம்பந்தன். பாவம் ஏமாளி மனிதரின் சாவீட்டுக்கும் தமிழ் மக்கள் போகாமல் இடுகாட்டுக்கு செல்ல வைத்துவிட்டார்.
ஆனால் சிங்களத் தலைவர்கள் சிம்மாசனத்தில் கோலாகலமாக வீற்றிருக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் தேர்தல் காலங்களில் சிங்களத் தலைவர்களுடன் கூட்டுச் சேர்வதை விடுத்து சிங்கள தலைவர்களுக்கு சவால்விடக் கூடியதாக சிங்களத் தலைவர்களை சிக்கலுக்குள் சிக்க வைத்து நெருக்கடியை கொடுப்பதன் மூலமே எதனையும் பெறமுடியும்.
இந்த அடிப்படையில்தான் இன்று தமிழ் மக்கள் பொதுச் சபையும் தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரனை நிறுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்தத் தேர்தல் காலத்தில் தமிழர் தாயகத்தில் ஒரு தேசிய எழுச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாய் இது அமைந்துவிட்டது.
தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் அனைத்தும் இத்தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டிய காலத்தில் ஏற்படும் தமிழ் தேசிய பேரெழுச்சியின் பின்னே நிற்க வேண்டிய கட்டாயத்தை தோற்றுவித்திருக்கிறது. அவ்வாறு நிற்கத் தவறுவோரும், தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக செயல்படுபவர்களும் தமிழ் தேசியத்தின் விரோதிகளாக, சிங்கள தேசத்தின் ஏவல் நாய்களாக தமிழ் மக்களால் தூக்கி வீசப்படுவார்கள் என்பது வரலாற்று விதி.
தமிழர் தரப்பு ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியும், சிங்களத் தலைவர்களை அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைய விடாமல் தடுத்து சிங்களதேச அரசியலை நெருக்கடிக்கு உள்ளாக்குவதன் மூலமும் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைகளை பெறுவதற்கான முதல் படியை எடுத்து வைக்க முடியும் என்பதை நடக்கவிருக்கும் தேர்தல் நிச்சயமாக வெளிக்காட்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 16 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.