ஜனாதிபதி தேர்தல் கொதிநிலை
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பருக்குள் நடத்தப்பட வேண்டும் என்பது அரசியல் யாப்புவிதி.
ஆயினும், சாதாழை அரசியல் ஆய்வுகளில் ஈடுபடும் ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படும் என அக்கப்போர் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
இந்த அறிவித்தல் வந்து இரண்டு நாட்களுக்குள்ளேயே ராஜபக்சக்கள் அணியிலிருந்து 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் பக்கம் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களை வியாபித்திருக்கிறது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் கொதிநிலை பற்றி சற்று ஆராய்வது அவசியமானது. இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஜனாதிபதி தேர்தல் பற்றி இலங்கை அரசியலில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் தமிழ் மக்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற கருத்தியல் வலுவடைந்து உறுதி அடைந்து இலங்கையின் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது.
தமிழ் வேட்பாளர்
இந்நிலையில், பல்வகைப்பட்ட கருத்துக் கணிப்பு தகவல்கள் வெளியாகின. அதில் 13 விகித வாக்குகளையே ரணில் பெறுவார் என்றும் அதே நேரம் அனுரகுமார திஸநாயக்க 60 வீத வாக்குகளை பெறுவார் என்றும் சஜித் பிரேமதாசா 25 வீத வாக்குகளை பெறுவார் என்றும் பல்வேறுபட்ட கருத்துக்கணிப்புகளை பல்வேறு தரப்பும் வெளியிட்டுக் கொண்டிருந்தன.
ஆயினும் ரணில் விக்கிரமசிங்கவே இன்றைய சூழலில் வெற்றி பெறுவார் என்ற கருத்தையே விடயம் அறிந்த வட்டாரங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.
ஆயினும், தமிழ் மண்ணில் இந்தக் கருத்துக் கணிப்புகளை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது என்ற தமிழ் மக்களின் கொள்கை ரீதியான அரசரவியல் கருத்து வலுவடைந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளரும் களமிறங்கினால் தமிழ் மக்களுடைய வாக்கின் பெரும்பகுதி தமிழ் வேட்பாளருக்கு போய்விடும் என்ற ஊகங்களும் வலுவடைந்திருக்கிறது.
தமிழ் வேட்பாளர் தொடர்பாக செயல் நடவடிக்கைகளில் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியமான "தமிழ் மக்கள் பொதுச்சபை" மேற்கொள்கின்ற தேர்தல் நடவடிக்கைகளும் பிரச்சாரங்களுமே இதன் விளைவை தீர்மானிக்கும் என்பதே உண்மையாகும்.
ஆனால், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கை அரசியலில் இன்றைய சூழலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்று கோய்கம சிங்கள உயர் சாதியினர் இடையே பொதுவான கருத்து ஒன்று உண்டு.
அதேநேரம், சிங்கள இளைஞர்கள் ஒரு சாரார் மத்தியில் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெறுவார் என்ற கருத்தும் உண்டு. அதேநேரம் அரகலயப் போராட்டக்காரர்கள் “மக்கள் போராட்ட முன்னணி“ சார்பில் நுவன் போபகே என்பவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கும் கண்டி சிங்கள உயர் சாதியினர் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் இல்லை. ஆயினும் இவற்றிற்கு அப்பால் நடைமுறையில் ரணில் விக்ரமசிங்க தவிர்க்கப்பட முடியாத சக்தி என்பதும் அவரினால் மட்டுமே இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற கருத்தும் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.
இந்நிலையில் இந்தத் தேர்தல் களம் பற்றி படம்பிடித்து காட்டுவதும் அவசியமாகிறது. இன்று தென் இலங்கை அரசியலில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சிக் கட்டமைப்பை ராஜபக்ச அணியினரும் சஜித் பிரேமதாச அணியினருமே பலமாக கொண்டுள்ளவர்களாக உள்ளனர்.
அதேநேரம், ஜேவிபியினர் கட்சி கட்டமைப்பை பலமாக கொண்டிருந்தாலும் அவர்களுடைய கட்சியின் அளவு என்பது மிகச் சிறிதாகவே உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் ரணில் விக்ரமசிங்க இப்போது பலமான கட்சி கட்டமைப்பை கொண்டிருக்காவிட்டாலும் தனிநபர் ஆளுமை, அரசியல் சாணக்கியம் என்ற அடிப்படையில் பிரச்சனைகளை இலகுவாக கையாண்டு வெற்றியின் பக்கம் ஒரு பெரும் பாய்ச்சலை நடத்தக்கூடியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இலங்கையின் அரசியலில் கோட்டாபய ராஜபக்சவின் எதேச்ச அதிகாரப் போக்கும், பொருளாதார நெருக்கடியும் மக்களை வீதியில் இறங்க வைத்து கோட்டாபயவை ஜனாதிபதி நாற்காலியில் இருந்து குதித்து தப்பியோட வைத்துவிட்டது.
கால அவகாசம்
கோட்டாபயவை ஓடத் துரத்தியதில் அரகலய போராட்டத்தின் பின் ஜேவிபியினர் பெரிய அளவில் செயல்பட்டார்கள். ஆயினும், அவர்களால் ஒரு கட்டமைப்பை குலைக்க, உடைக்க, நாசம் செய்ய முடியுமே தவிர ஒரு அரசியல் அதிகாரக் கட்டமைப்பை கட்டமைப்பு செய்ய முடியாது.
இதனை கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் ரணில் சிம்மாசனத்தில் அமர்ந்ததன் மூலம் வெளிகட்டப்பட்டது. இங்கே ஜேவிபினரோ அல்லது அரகலையப் போராட்டக்காரர்களோ இலங்கை அரசியலில் குழப்பங்களை விளைவிக்க முடியும்.
அதிகாரத்தில் உள்ளவர்களை சவாலுக்கு உட்படுத்த முடியும். ஆனால் அவர்களினால் அதிகாரத்தை பிடிக்க முடியாது. அதிகார சக்தியாக மாறமுடியாது. அதற்கு இலங்கையின் அரசியல் கலாச்சாரமும், பௌத்த மத பீடங்களும் ஒருபோதும் ஒத்துழைக்காது.
இதுவே இலங்கையின் அரசியல் செல்நெறி. இதனை மாற்றுவது இலகுவான காரியம் அல்ல. அது உடனடியாக நடைமுறைக்கு சாத்தியமற்றதுங்கூட.
இலங்கை பொருளாதார நெருக்கடி, ஊழல், அதிகார துப்பியோகம் என்ற குற்றச்சாட்டுகளின் பெயரால் கோட்டாபாயவுக்கு எதிராக ஒரு சிறிய தொகை மக்கள் வீதியில் இறங்கி போராடுவதைக் கண்டு பயந்து கோட்டாபாய பதவியை துறந்து ஓடியதன் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கு இருந்த போர்வெற்றி வீரர்கள் என்ற பெரும் செல்வாக்கு மக்கள் போராட்டத்தின் மூலம் சரிந்து இருக்கிறது.
ஆகவே, மொட்டுக் கட்சி கட்சிக்கட்டமைப்பு என்ற ரீதியில் அது பலமாக இருந்தாலும் அதனுடைய ஆதரவு தளம் என்பது சரிவைச் சந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும்.
எனவே, இன்றைய சூழலில் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிடுவது பொருத்தமற்றது என்பதை மொட்டு கட்சியினர் உணர்ந்துள்ளனர்.
ராஜபக்சக்களின் இந்த ஆதரவுத்தளச் சரிவை மீள்கட்டுமானம் செய்வதற்கும் பலப்படுத்துவதற்கும் அவர்களுக்கு ஒரு கால அவகாசம் தேவையாக உள்ளது. அத்தோடு இன்னும் 25 வருடங்களுக்கு இலங்கையில் அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தியாக ராஜபக்ச குடும்பம் வாரிசுகள் ஓர்மம்மிக்க தலைவர்களாக வளர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பதும் உண்மையே.
ராஜபக்சக்கள் தமது அதிகாரத்தையும் தலைமைத்துவத்தையும் நிலைநிறுத்துவதற்கு தடையாக இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. ஒன்று சர்வதேச மட்டத்தில் ஈழத் தமிழர் சார்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், அது சார்ந்த போர் குற்ற விசாரணையையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.
இந்நிலையில், அவர்கள் மேற்குலகின் நிபந்தனைகளுக்கும், அழுத்தத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள். அரகலயக் கிளர்ச்சிக்கு எதிராக ராஜபக்சாக்களால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போனதற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சர்வதேச அர்த்தத்தில் ஒரு தூக்குக் கயிறாகத் தொங்கிக்கொண்டிருந்தமையையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.
அதேநேரத்தில், உள்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியும் விலைவாசி உயர்வும் அடித்தட்டு மக்களை பெரிய அளவில் பாதித்திருக்கிறது. இத்தகைய ஒரு பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குமான சர்வதேச ஆதரவு ராஜபக்சக்களுக்கு தற்போதைய நிலையில் இல்லை.
அல்லது, வெளிநாட்டு உதவிகளை பெறுவதற்கு மேற்குலகத்தை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் ராஜபக்சக்களினால் நடந்துகொள்ள முடியாது.
அதேநேரத்தில் மேற்குலகை விடுத்து சீனாவிடம் சரணடைந்து சீனாவிடம் பொருளாதார உதவிகளை முழுமையாக பெறுவதை மேற்குலகமும் இந்தியாவும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.
மொட்டு கட்சியினர்
சீனா பக்கம் சென்றால் சீனா தூக்கிப் போடுகின்ற சில்லறைக்காசு இலங்கையின் திறைசேரியை நிரப்பிவிடும் என்பதும் உண்மைதான். ஆனாலும் முழுமையாக சீனா பக்கம் செல்வது என்பது ராஜபக்சக்கள் தமக்குத் தாமே தூக்குக் கயிறை மாட்டி விடுவதாக அமைந்துவிடும்.
எனவே, இத்தகைய ஒரு சூழலில் இருக்கின்ற தமது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு தமக்கான பொருத்தமான காலம் வரும் வரை ராஜபக்சக்கள் காத்திருக்க வேண்டிய ஒரு அரசியல் சூழல் இலங்கை அரசியலில் தற்போது நிலவுகிறது.
எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கின்ற போது ராஜபக்சக்களின் கட்சியில் இருந்து அல்லது குடும்பத்திலிருந்து ஒருவரை தேர்தலில் களம் இறக்குவதை ஒத்திப்போடவே அவர்கள் விரும்புகிறார்கள்.
இருக்கும் நிலைமையை தொடர்ந்து தக்க வைப்பதே அவர்களுடைய தந்திரோபாயமாக உள்ளது. நாமல் ராஜபக்சேவை அடுத்து வரும் நாடாளுமன்றத்தில் பிரதமர் நாற்காலியில் அமர்த்துவதன் மூலம் ரணிலுக்குப்பின் அடுத்த ஜனாதிபதியாக அமர்த்துவதே அவர்களின் திட்டம்.
அப்படியாயின் ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அதற்கு அமைவாகவே ராஜபக்சர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். எனவே, இந்நிலையில் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாமல் ராஜபக்சவை பிரதமர் ஆக்குவது என்ற நிபந்தனையுடனே ரணில் விக்ரமசிங்கவுக்கு மொட்டுக் கட்சி ஆதரவளிக்கும்.
ரணிலைப் பணியவைக்கவும் இந்த உடன்பாட்டை எட்டுவதற்காகத்தான் ராஜபக்சக்கள் தங்கள் நெஞ்சை நிமிர்த்தி புயபலத்தை ரணிலுக்கு காட்டவே பல்வகைப்பட்ட செயற்பாடுகளிலும் பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தனர். இந்தப் புயபல திமிர் கொண்ட பேச்சை ஒரு கட்டத்துக்கு மேல் ரணிலினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதிகாரத்தில், ஆட்சியில் அமர்ந்திருப்பவருக்கு அரசு என்கின்ற கட்டமைப்பின் அனைத்து வளங்களும் அதிகாரமையங்களும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய அதிகார பலமுண்டு. எனவே அந்த அரச கட்டமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடிய அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் ரணிலுக்கு உண்டு.
ரணிலிடம் கட்சி கட்டமைப்பு இல்லாமல் விட்டாலும் அரச கட்டமைப்பு அவரின் கையில் இருப்பதனால் அவர் இப்போது பலமாகவே உள்ளார். ரணிலிடம் கொள்கை வகுப்பாளர்கள் (policy makers) முடிவு எடுப்பவர்கள் (decision makers) சக்தி மூலங்கள் (Power source) உண்டு. அதிகாரமட்டங்கள் கீழ்ப்படிந்து அவருக்காக சேவையாற்றும்.
எனவே, அரச கட்டமைப்பை பயன்படுத்தி எந்த பெரிய செலவும் இன்றி இலகுவாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவரினால் அரசியலில் செல்வாக்கு மிக்க சக்திகளின் ஆதரவை பெறமுடியும்.
அதற்காக அரச கட்டமைப்பில் இருக்கின்ற சலுகைகளை வழங்குவது அதாவது கோட்டாக்களை வழங்குவது, நீதித்துறை சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பது, பாதுகாப்பு துறை சார்ந்த அனுசரணைகளை வழங்குவது, அவர்களுக்கான வருவாய் மார்க்கங்களுக்கு தடையாக இருப்பவற்றை விலக்களிப்பது போன்றவற்றினை மேற்கொண்டு ஆதரவை திரட்ட முடியும்.
இவை எந்தத் தேர்தல் நடைமுறைகள் விதிகளுக்குள்ளும் கட்டுப்படாது. தடுக்கவும் முடியாது. இந்நிலையில் அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி என்ற அடிப்படையில் ரணிலின் பக்கம் செல்வதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வகைப்பட்ட நலன்களை பூர்த்தி செய்ய முடியும்.
மேலும், மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் பகுதியினர் புதிய முகங்களாகவும் இளையவர்களாகவும் இருப்பதனால் நாடாளுமன்றம் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய முன்னர் கலைக்கப்பட்டுவிட்டால் அவர்களுக்கு உரிய ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடும் என்ற ஒரு உண்மையும் இங்கே மறைந்து கிடக்கிறது.
இந்த நலன்களை அடைவதற்காகவே தற்போது மொட்டு கட்சியின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் பக்கம் கையை உயர்த்தி இருக்கிறார்கள்.
அது மாத்திரமல்ல. இந்த நாடாளுமன்றத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கு ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை ரணில் நடத்துவாரேயானால் இரட்டிப்பு நலனை இந்த நாடாளுமன்ற புதிய முகங்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எதிர்வரும் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்குமேயானால் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள பலர் காணாமல் போய்விடுவார்கள் என்று அச்சமும் உள்ளது.
நாமல் ராஜபக்ச
ஆனால், இது வயோதிப தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். எனவேதான் பரஸ்பர நலன்கள் சந்திக்கும் புள்ளியில் உறவுகள் மலரும் என்ற அடிப்படையில் சிங்கள இளைய நாடாளுமன்ற பிரதிநிதிகளும் தமிழ் வயோதிப நாடாளுமன்ற பிரதிநிதிகளும் ரணிலின் பக்கம் ஓட தொடங்கி விட்டனர்.
இப்போது ரணிலின் வாக்குப்பலம் மும்மடங்காக அதிகரித்துவிட்டது. ஆனாலும் கட்சி கட்டமைப்பு பலமாக இல்லாத ரணிலுக்கு இந்த வாக்கு பலத்தை தொடர்ந்து கட்சி கட்டமைப்புக்குள் கொண்டுவந்து நிலை நிறுத்த முடியாது. தொடர்ந்து தக்க வைக்கவும் முடியாது.
எனவே, இப்போது அவருக்கு கிடைத்திருக்கின்ற இந்த வாக்குப்பலம் என்பது தற்போதைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்தி தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும். ஆனால் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமேயானால் அதன் நிலைமை மறுவளமாக இருக்கும்.
அது கட்சி கட்டமைப்பை கொண்டுள்ள ராஜபக்சக்களின் பக்கமே இருக்கும். இப்போது இருக்கின்ற நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தவே ரணிலும் முனைவார். அவ்வாறே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முனைவார்கள். இதுவே இயல்பானது. ஆயினும், எது எப்படி நடந்தாலும் ராஜபக்சர்களை பொறுத்த அளவில் ரணிலை கைவிட முடியாது.
ரணிலை விட்டு ஏனைய தெரிவிற்குச் செல்வது மிக ஆபத்தானது. ரணிலை கொலுகம்பாக பயன்படுத்தியே நாமல் ராஜபக்சவை சிம்மாசனத்தில் அமர்த்த முடியும். எனவே ரணிலுடனான ராஜபக்சக்களின் உறவு என்பது இன்றைய நிலையில் தவிர்க்கப்பட முடியாததும் பிரிக்கப்பட முடியாததுமான எதார்த்தமாகும்.
நாமலை சிம்மாசனத்தில் ஏற்றுவதற்கான ஒரு இடைக் காலத்திற்கு மொட்டுக் கட்சிக்கு ஓர் இடைக்கால பதிலாள் தேவை. அது யாரெனில் ரணில் விக்ரமசிங்கவே.
அவரால் மட்டுமே போர் குற்றத்திலிருந்து ராஜபக்சக்களை காப்பாற்ற முடியும், இலங்கையின் பொருளாதாரத்தை தொடர்ந்து தக்கவைக்க முடியும். அவரை பயன்படுத்தியே எதிர்காலத்தில் மொட்டு கட்சியை பலப்படுத்தவும் முடியும். இத்தகைய பல்தரப்பட்ட சாதக பாதக அரசியல் சாத்தியங்கள் அடுத்த தொடரில்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 03 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.