ஜனாதிபதியின் முதலாவது சுற்றறிக்கை : அம்பலமாகிய மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தின் உண்மை
சர்வதேச உறவுகளில் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக அதிகாரம் கொண்ட ஒரே நிறுவனம் மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சு என்பதை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இலங்கையில் உள்ள ஏனைய துறைசார் மற்றும் மாகாண அமைச்சுகளுக்கும், அனைத்து தூது குழுக்களுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்க ஜனவரி முதலாம் திகதி வெளியிட்ட PS/SG/Circular/1/2025 இலக்க சுற்றறிக்கைக்கு அமைய,
"வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் துறைசார் அமைச்சு மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகள்."
இனிமேல், இலங்கையின் துறைசார் அமைச்சுகள், மாகாண அமைச்சுகள், எந்தவொரு அரசாங்க நிறுவனமும், வெளிநாட்டு அரசு அல்லது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட தூதுக் குழுவை கையாளும் போது, அது வெளிவிவகார அமைச்சரின் முழு மேற்பார்வை மற்றும் அறிவுறுத்தலின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 09, 2023 அன்று வெளியிடப்பட்ட PS/EAD/Cricular/16/2022 என்ற சுற்றறிக்கையில் திருத்தம் செய்து இது வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளி அரசுகளுடனோ அல்லது தூதுக் குழுக்களுடனோ..
பதினொரு பக்க சுற்றறிக்கைக்கு அமைய, 15 முக்கிய விதிமுறைகள் மற்றும் பல துணை விதிமுறைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளதோடு வெளிவிவகார அமைச்சு தவிர, ஏனைய அனைத்து துறைசார் மற்றும் மாகாண சபை அமைச்சுகள் மற்றும் அந்த அமைச்சுகளின் கீழ் உள்ள கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்கள், அனைத்து அரசாங்க நிறுவனங்கள் சுதந்திரமாக வெளி அரசுகளுடனோ அல்லது தூதுக் குழுக்களுடனோ எந்த வகையிலும் செயற்படக்கூடாது.
அவசரச் சூழல் ஏற்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிவிவகார அமைச்சரின் முழு அனுமதியும் பெறப்பட வேண்டும் எனவும், அதற்கான பணிகள் முடிந்த பின்னர், அது தொடர்பான அனைத்து எழுத்து மற்றும் வாய்மொழி கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றின் அசல் பிரதிகளை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்குவது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகள், சர்வதேச அமைப்புகள், அரசுகள் மற்றும் அமைச்சுகளின் எல்லைக்குட்பட்ட அமைப்புகளுடன் அரசியல் முகம் இல்லாமல் கடிதப் பரிமாற்றத்தில் ஈடுபடவும், பேச்சு நடத்தவும், ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவதோடு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வெளிவிவகார அமைச்சுக்கு ஒவ்வொரு விடயங்கள் பற்றி விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு
புதிய சுற்றறிக்கையின் பிரிவு 2.1.6 ஒரு குறிப்பிட்ட அமைச்சு அல்லது அரச திணைக்களத்தால் தற்போது முன்னெடுக்கப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கொடுக்கல் வாங்கல்கள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“வெளிவிவகார துறை சார்ந்த அமைச்சின் ஒருங்கிணைப்பில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு, உதவி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக அமைச்சுகள்/திணைக்களங்கள் இலங்கையில் உள்ள தொடர்புடைய ஐக்கிய நாடுகள் நிறுவனங்களுடன் தொடர்ந்து நேரடியாக தொடர்பு கொள்ளும்.
எவ்வாறாயினும், துறைகளுக்கிடையில் அல்லது ஐக்கிய நாடுகள் முகவர்களுக்கிடையிலான புதிய கொள்கை முன்முயற்சிகள் தொடர்பான எந்தவொரு விடயமும் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சின் உடன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
மகளிர், சிறுவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் ஐக்கிய நாடுகள் மற்றும் பிற அரசுகளுக்கிடையேயான அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தயாரிக்கப்படும் வெளியீடுகள்/அறிக்கைகளுக்கும் துறைசார்ந்த நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக, வெளிவிவகார அமைச்சு அத்தகைய வெளியீடுகள்/அறிக்கைகளுக்கான ஆலோசனைச் செயல்பாட்டில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்".
அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கீழ்
இதற்கு முன்னரும் வெளிநாட்டு அரசாங்கங்கள், தூதரகங்கள் மற்றும் அமைப்புகளை கையாள்வதில் இலங்கை அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை பாதிக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருந்ததை எங்கள் ஆய்வின் போது அறிந்தோம்.
ஆனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் சுற்றறிக்கையின் விதிமுறைகளுக்கு அமைய ஏதோ ஒரு மட்டத்திலோ அல்லது மாகாண, பிராந்திய மட்டத்திலோ, கூட்டுத்தாபன மட்டத்திலோ பரவலாக்கப்பட்ட அனைத்து நிர்வாக அதிகாரங்களும் ஒரே ஆவணத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனை பார்க்கையில், இந்த நாட்டிலுள்ள அனைத்து அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் செயற்படும் இலங்கையின் அனைத்து தூதுக் குழுக்களுக்கும் விலங்கிடப்பட்டுள்ளதோடு சுற்றறிக்கையை கவனமாக அவதானித்தால், கட்டுப்பாடுகள் உண்மையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அந்த நிறுவனங்கள் மீது அல்ல.
மாறாக மாகாண அமைச்சுகளின் கீழ் செயல்படும் அதிகாரம் பெற்ற விடயங்களுக்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம்
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் மாகாண அபிவிருத்திக்காக அதிகாரம் பெற்ற அமைச்சுகள், திணைக்களங்களும் அதன் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் இனிமேல் மத்திய அரசாங்கத்தின் விருப்பப்படியே மாகாணங்களில் வாழும் மக்களின் நலனுக்காக செயற்பட முடியும்.
குறிப்பாக சுற்றறிக்கையின் பிரிவு 2.1.6 இல் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, மகளிர், சிறுவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை அந்தந்த மாகாணங்களின் மனித வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான பிரச்சினைகளாகும்.
வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனங்கள், அரசுகளுக்கிடையேயான தூதுக்குழுக்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ நிறுவனங்கள் போன்றவற்றுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களின் நோக்கத்திற்காக கையேட்டைத் தயாரிக்க வாய்ப்பு இல்லை.
இப்படிச் செய்வதனால் மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் முழு அனுமதியும், அதற்குப் பின்னர் படிப்படியாக இடம்பெறும் விடயங்கள் குறித்த தெளிவுபடுத்தல்களையும் வழங்க வேண்டும்.
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறைசார்ந்த அமைச்சுகள், திணைக்களங்கள், தூதரகங்கள் அல்லது பிற நிறுவனங்களையும் சட்டம் பாதிக்கிறது என்றாலும், அது மாகாண நிறுவனங்கள் அளவிற்கு நேரடியாகவோ அல்லது கடுமையாகவோ பாதிக்காது,
ஏனெனில் அவை அனைத்தும் கொழும்பில் அல்லது மத்திய நிர்வாகத்தை கேந்திரமாக கொண்டு அமைந்துள்ளன. எனவே, அந்த அமைச்சுகளின் அமைச்சர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சுடன் உடனடி கலந்துரையாடல் மற்றும் தொடர்பாடல் மட்டத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏனைய மாகாண அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களை விட அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆனால் வடக்கு, கிழக்கு உட்பட தீவின் ஏனைய தொலைதூரப் பிரதேசங்களின் நிலைமை கொழும்பில் உள்ள நிர்வாக நிலைமையிலிருந்து மிகவும் வேறுபட்டது.
ஒரு சாதாரண சூழ்நிலையில் கூட, மத்திய அரசின் துறைசார்ந்த நிறுவனங்களுடன் இத்தகைய மாகாணங்களின் நிர்வாகப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு மிகவும் தாமதமாகவும் கால தாமதமாகவுமே இடம்பெறுகின்றது.
நிர்வாக மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள்
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வெளிவிவகார அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குக் கீழுள்ளபோதிலும், அது மேலே காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய சிக்கலான அல்லது கடுமையான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படவில்லை.
எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் பொது நலன் அல்லது சுகாதார பிரச்சினைகளுக்காக ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் சுதந்திரமாக வேலை செய்யும் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவில் உதவி பெறும் முறை காணப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது சுற்றறிக்கையின் பிரகாரம் குறைந்த பட்சம் சுகாதார விடயங்களில் கல்வி விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு இடமில்லை.
அவ்வாறு செய்யும்போது வெளிவிவகார அமைச்சரின் முழு ஒப்புதலைப் பெற்றால் மாத்திரம் போதுமானதல்ல, அனுமதி வழங்கப்பட்டாலும், நடவடிக்கைகளின் போது அனைத்தும் வெளிவிவகார அமைச்சின் கடுமையான கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் அனைத்து துறைசார்ந்த மற்றும் மாகாண அமைச்சுகள், அவற்றின் கீழ் உள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள், இலங்கையில் மற்றும் இலங்கை சார்பாக வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் உள்ள பல்வேறு தூதுக் குழுக்களின் ஒவ்வொன்றுக்கும் உரிய மாறுபட்ட விடயதானங்களில் உள்ள பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் மூலம் அது எவ்வாறு தீர்க்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது.
உதாரணமாக, வெளிவிவகார அமைச்சிடம் மாகாண சுகாதாரம் அல்லது கல்வி விவகாரங்கள், காலநிலை அல்லது உணவு தொடர்பான நிபுணர் மட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு போதுமான நிபுணத்துவ மனித வளங்கள் உள்ளனவா?
இப்போதும் கூட, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் போன்ற இலங்கையில் உள்ள பல முக்கிய பொது மற்றும் அரை-பொது நிறுவனங்கள், சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பில் தலையீடு செய்யும் திணைக்களங்கள்,
கர்ப்பிணி மற்றும் குழந்தை போஷாக்கு திட்டங்கள், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பல்வேறு தொற்றுநோய் தடுப்பு திட்டங்கள், சமூக சுகாதார சேவைகள், சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு தொடர்பிலான திட்டங்கள், மேலும் இதுபோன்ற பல நிறுவனங்கள், அமைப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஐக்கிய நாடுகள் சபை அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நிதியின் கீழ் செயற்படுகின்றன என்பது இரகசியமல்ல.
மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்திற்கு...
புதிய சுற்றறிக்கையின் விதிமுறைகளின்படி இரு தரப்பினரும் செயல்பட வேண்டும் என்றால், இது மேற்படி நிறுவனங்களால் பராமரிக்கப்படும் வழக்கமான நடைமுறைக்கு புறம்பானது.
கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அவசர அல்லது விசேட சூழ்நிலையில் கூட மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சரின் கட்டளை மற்றும் அதிகாரத்தின் கீழ் இல்லாமல் எந்த மனிதாபிமான வேலைத்திட்டமும் அல்லது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது.
இது தொடர்பாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "அவசர மற்றும் விசேட தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கூட, ஒரு துறைசார்ந்த அமைச்சு/திணைக்களம்/அரசு நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கு, வெளிவிவகார துறைக்கு பொறுப்பான அமைச்சின் மூலம் கோரிக்கைகளை நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்புமாறு வெளிநாட்டுத் தூதுக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமான நெருக்கடியிலோ அல்லது பேரழிவிலோ உதவி அல்லது வசதிகளை வழங்குவதற்கு முன், வெளிநாட்டு தூதுக் குழுக்கள் உட்பட அனைத்து வகையான சர்வதேச அமைப்புகளும் மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சரிடம் முழு அனுமதியைப் பெற வேண்டும் என்பதே இதன் பொருள்.
அதுமாத்திரமல்ல, தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்கள், தூதுக் குழுக்கள் அவர்களது சேவைகளை வழங்க எதிர்ப்பார்க்கும் அரச நிறுவனங்கள் அல்லது மாகாண அமைச்சு உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அவர்களால் பெறப்பட்ட கோரிக்கைகளை வெளிவிவகார அமைச்சு பரிசீலிக்க வேண்டும்.
வெளிநாட்டு தூதுக் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, இலங்கையில் உள்ள இரு தரப்பினரின் பதில்களுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும்.
வெளிநாட்டு உதவிகள் அல்லது மனிதாபிமான செயற்பாடுகள் செயற்திட்டங்களை தற்போது விட வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டிய தேவையிருந்தால், இது போன்ற விடயங்களை மேலும் சிக்கலாக்காமல் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவசர மற்றும் அவசியமான சூழ்நிலையில் சில விதிவிலக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஜனாதிபதியின் இந்த சுற்றறிக்கையின் விதிமுறைகளுக்கு அமைய செயற்படுமாறு இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும், இதுபோன்ற அரசுகளுக்கிடையேயான அல்லது பிற சர்வதேச நிறுவனங்கள் இது தொடர்பாக எந்தப் பதிலையும் அளித்துள்ளனவா என்பது தெரியவில்லை.
எவ்வாறாயினும், இதுவரை பெயரளவில் அல்லது மாகாண மற்றும் நிறுவன மட்டத்தில் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள், ஜனாதிபதியின் சுற்றறிக்கையின் மூலம் மத்திய அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்திற்கு முற்றிலும் அடிபணிந்துள்ளது என்பதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 23 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.