அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அம்பலம் : பொதுஜன பெரமுன
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம், தற்போதைய அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற உண்மையை அரசே நாட்டுக்கு வெளிப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. அந்தக் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்குப் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதையும் பார்க்க முடிகின்றது.
மக்கள் ஆணை
ஆனால், ஒரு கூட்டத்துக்குத் திரளும் மக்களின் எண்ணிக்கையை மாத்திரம் வைத்துக்கொண்டு, நாடு முழுவதும் அந்தக் கட்சிக்கு அதிகளவான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூற முடியாது.
ஜே.வி.பி. மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற காலங்களிலும் பெரிய கூட்டங்களை நடத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அவர்களின் உறுதியான உறுப்பினர்களே அத்தகைய கூட்டங்களுக்குச் செல்வர்.

அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான ஆதரவு இருக்குமானால், தேர்தலை நடத்தி அதனை நிரூபிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து காலதாமதம் செய்வதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமை மட்டுப்படுத்தப்படுகின்றது.
தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதைப் பார்க்கும் போது, அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்து அரசுக்கே அச்சம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. எந்தவொரு அரசும் மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் தமது வாக்குரிமை மூலம் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான அளவுகோல் தேர்தலாகும். எனவே, பொய்ப் பிரசாரங்களை விடுத்து, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி மக்களின் உண்மையான தீர்ப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்