பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
கண்டி, கஹபத்வல பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகளுடன் மிக நெருக்கமான பிரபல வர்த்தகர் ஒருவரின் பங்களா ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் குழுவொன்று, பங்களாவில் கொங்கிறீட் போட்டு மூடப்பட்டிருந்த குழி ஒன்றை தோண்டியுள்ளனர்.
இதன்போது, அதற்குள் இருந்த துப்பாக்கிகள், பிஸ்டல்கள், தானியங்கித் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் உள்ளிட்ட பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் மீட்பு
அவற்றில் 409 டி-56 ரவைகளும், 2310 பிஸ்டல் ரவைகளும், 384 ரிவோல்வர் ரவைகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையால் பயன்படுத்தப்படும் MPMG ரக 167 ரவைகளும், எம்16 ரக 411 ரவைகளும், 22 - 28 பொயிண்ட் போரில் 12 துப்பாக்கித் ரவைகள் இரண்டு உட்பட மேலும் பல ரவைகளும் 4 தகரப் பெட்டிகளும் இந்த பொருட்களில் அடங்கியிருந்தன.
குறித்த வெடிபொருட்கள் மற்றும் ரவைகள் தொகுதி குறித்து பங்களாவின் உரிமையாளரான வர்த்தகரால் கலகெதர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, பொலிஸ் அதிகாரிகள் அந்தத் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் உள்ளிட்ட ஆயுதப் பெட்டிகளைப் பரிசோதித்து அவற்றை பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த வெடிபொருட்கள் இருந்த வீடு, கண்டியைச் சேர்ந்த மற்றுமொரு வர்த்தகர் ஒருவரால் 2022 ஆம் ஆண்டு, சமூகத்தில் பிரபலமான ஒருவரின் உறவினரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்து மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.