புதுக்குடியிருப்பில் வெள்ளத்தினால் ஏற்பட்ட மாற்றம்! பிரதேச செயலகத்தின் செயல்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மழையினால் ஏற்பட்டிருந்த வெள்ளத்தினால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன.
பிரதேச செயலகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்து வரும் நாட்களில் மழையினால் ஏற்படவுள்ள வெள்ள அனர்த்தத்தினை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்கலாம்.
வீதியோர நீரோட்ட வடிகால்களில் மாற்றம்
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியின் இரு புறங்களிலும் உள்ள வடிகால்கள் புற்களாலும், சிறு பற்றைகளாலும் நிரம்பியிருந்ததோடு குப்பைகளாலும் நிறைந்திருந்தன.
அதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட அதிகளவான நீர் வடிந்தோட முடியாது வெள்ளம் ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில், 25.11.2023 முதல் அதிக மழை வீழ்ச்சியின் போது ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தத்தினை குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக புதுக்குடியிருப்பில் இருந்து இரணைப்பாலை நோக்கி செல்லும் பாதையின் இரு பக்கங்களிலும் உள்ள வடிகால்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.
ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் வடிகால்களில் வளர்ந்துள்ள சேம்பு, புற்கள்,தேங்கியுள்ள குப்பைகள் என நீரோட்டதிற்கு தடையாக உள்ளவையெல்லாம் அகற்றப்படுவதை அவதானிக்க முடிந்தது.
மகிழ்ச்சியில் மக்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வடிகால் சுத்திகரிப்பு செயற்பாடு மகிழ்ச்சியளிக்கின்றது.
இதனால் தொடரும் மழையினால் ஏற்படவுள்ள வெள்ள அனர்த்தத்தினை தடுக்க முடியும் என புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த வடிகால் சுத்தமாக்கப்படும் பணி வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்பார்வை செய்யப்படுவதாகவும் எடுத்துரைத்திருந்தார்.
இந்த பணியில் பங்கெடுத்துள்ள பணியாளர் ஒருவர் இரணைப்பாலை வரை வீதியின் இருபக்கங்களும் நீரோட்டத்திற்கு இடையூறாக செடிகளாலும் குப்பைகளாலும் நிறைந்து இருப்பதனை அவதானிக்க முடிந்தது.
இது சிறப்பாக அவதானிக்கப்பட்டு சீர்செய்யப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது என புதுக்குடியிருப்பு வாழ் மக்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.




