மொட்டு ஆட்சி மீண்டும் மலரும்! சாகர காரியவசம் அதீத நம்பிக்கை
நாமல் ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
தாம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் நூறு சதவீதத்தையும் நிறைவேற்றிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டுமே என்றும், ஆனால் பொய்களின் மூலம் நாட்டை அழிக்கும் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தற்போது உருவாகியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் நேற்று(17.11.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
30 ஆண்டுகளாக நீடித்த யுத்தம்
மேலும் தெரிவித்ததாவது, "கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான கோட்டையாக விளங்கியது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியல் தொகுதியான அங்கு, கடந்த தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மக்களை எந்தளவுக்குப் பொய்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது சுமார் 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தம் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் முன்னெடுத்தார்.
ஆனால், அவரைத் திருடன் எனச் சித்திரித்து மக்களின் மனங்களில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தித் தோற்கடித்தனர்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் இன்றி
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டது. மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இரண்டு ஆண்டுகள் நாட்டை முடக்க வேண்டியிருந்ததால் அரசின் வருமான வழிகள் பாதிக்கப்பட்டு எரிபொருள், மின்சாரம், எரிவாயு விநியோகத்துக்கான நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முன்னைய தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவற்றை நூறு சதவீதம் நிறைவேற்றிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டுமே.
அநுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி குளங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார். ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் அவற்றுக்காக ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை.
மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து விலகிய காலத்தில் நாட்டின் வறுமை விகிதம் ஆறு சதவீதமாக இருந்தது. தற்போது அது 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் இன்றி அவரைச் சிறையில் தடுத்து வைத்திருப்பது அரசியல் பழிவாங்கலாகும்.
எனவே அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும்.
எதிர்காலப் பொருளாதாரத்தையும், புதிய உலகின் தொழில்நுட்ப மாற்றங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய தலைமைத்துவத்தை வழங்கக்கூடியவராக நாமல் ராஜபக்ச விளங்குகின்றார்.
ஆகவே, நாமல் ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மீண்டும் மலரும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.