2022 இற்கான பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது! தெரிவாகியுள்ள மூன்று வீரர்கள்: விருது யாருக்கு...!
2022 ஆம் ஆண்டுக்கான பிபா உலக கால்பந்தாட்ட தொடரின் சிறந்த வீரருக்கான விருது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கி வருகின்றது.
மூன்று இறுதிப் போட்டியாளர்கள்
கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி கத்தாரில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா உலகக்கிண்ண கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.
வீரர்களின் சாதனைகள்
FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில், அதிக கோல்கள் அடித்தவரான பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே மொத்தம் 8 கோல்கள் அடித்து தங்க காலணியை பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, ஆர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை பெற்றுக்கொண்டார்.
காயம் காரணமாக உலகக் கோப்பையை தவறவிட்ட பிரான்ஸ் வீரர் பென்சிமா, கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு சிறப்பாக விளையாடியதற்காக கடந்த ஆண்டு பலோன் டி'ஓர் விருதை பெற்றுள்ளார்.
இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான பிபா உலக கால்பந்தாட்ட தொடரின் சிறந்த வீரர் யார் என்பது பெப்ரவரி 27ம் திகதி பாரிஸில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.