தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை கடுமையாக சாடிய சரவணபவன்..!
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு முக்கிய விடயங்கள் என்றால் ஏதாவது ஒரு வருத்தம் வந்துவிடும். ஏனென்றால் அவருக்கு கையொப்பமிட விருப்பம் இருக்காது என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (20) வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தென் இலங்கையின் தேசியம்
மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரன் வாக்கு கேட்டு பிரசாரத்திற்கு செல்ல மாட்டார். பிரசாரக் கூட்டங்களுக்கு செல்வாராக இருந்தால் இலங்கையில் உள்ள அத்தனை விசேட அதிரடிப்படைகளும் அவரை புடை சூழ செல்ல வேண்டும். அவ்வளவு கோபத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.
எங்களுடைய தேசியத்தை முழுமையாக தென் இலங்கையின் தேசியத்துடன் கரைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றவர்தான் சுமந்திரன்.
தமிழரசு கட்சியில் உள்ள ஒவ்வொருவரையும் வெளியேற்றி விட்டார். தமிழரசு கட்சியில் முக்கியஸ்தராக இருந்த கே.வி.தவராசா கட்சியை விட்டு வெளியேறிய அடுத்த நாள் மாவை சேனாதிராஜாவும் தனது அத்தனை பதவிகளிலும் இருந்து விலகியுள்ளார்.
மாவை சேனாதிராஜா கட்சியின் முதுகெலும்பு என வர்ணிக்கப்பட்டவர். கட்சியை ஒற்றுமையுடன் கொண்டு செல்வதற்கு மிகவும் பாடுபட்டவர்.
இந்நிலையில் அந்த கட்சியை விட்டு விலகுவதை விட எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.
விருப்பு வாக்கு கேட்கும் ஏழு பேர்
வேட்பாளர் தெரிவுப்பட்டியலில் 17 பேர் இருந்தார்கள். ஆனால் தனக்கு சாதகம் இல்லாதவர்களை, முதுகெலும்பில்லாத சக்தியலிங்கமும் சுமந்திரனும் இணைந்து நீக்கிவிட்டு, சுமந்திரன் தன்னுடன் சேர்த்து 9 பேரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்.
அந்தவகையில் இவர்கள் ஏழு பேரும் விருப்பு வாக்கினை கேட்டால் அவர் நிச்சயமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
ஆனால் அந்த விருப்பு வாக்கு கேட்கும் ஏழு பேரும் தாங்கள் வெல்லும் நிலையில் இருப்பார்களா என்பது கேள்விக்குறி.
ஏனென்றால் போடப்பட்ட ஏழு வேட்பாளர்களுமே கேள்விக்குரியவர்கள். அத்துடன் அந்த வேட்பாளர்களே வாக்குகளை கேட்பார்களோ தெரியவில்லை. அப்படி கேட்டால் அவர்களுக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் ஈஸ்வரபாதம் சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |