ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்த தாய்லாந்து எண்ணெய் கப்பல்
தாய்லாந்து மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பலனாக, தாய்லாந்துக்குச் சொந்தமான மசகு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் (Tanker) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பாதுகாப்பாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கடந்த திங்கட்கிழமை இந்தப் பாதுகாப்பான பயணம் சாத்தியமானது.
'பாங்சாக் கார்ப்பரேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், கடந்த மார்ச் 11 முதல் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
எண்ணெய் கப்பல்
தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கேவ் மற்றும் தாய்லாந்துக்கான ஈரான் தூதுவர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையில், தாய்லாந்து கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஈரான் உறுதி அளித்தது.
குறிப்பாக, இந்தப் பயணத்திற்காக ஈரான் எவ்வித கட்டணமும் வசூலிக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் தாய்லாந்து கொடியுடன் சென்ற மற்றொரு கப்பல் தாக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் கப்பல் ஏப்ரல் தொடக்கத்தில் தாய்லாந்து சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மற்றொரு தாய்லாந்து கப்பலும் இதேபோன்று பாதுகாப்பாகக் கடப்பதற்கான அனுமதியை அந்நாடு கோரியுள்ளது.