மியன்மாருடன் மீண்டும் பேச்சுவார்த்தை: தாய்லாந்து பிரதமர் வலியுறுத்தல்
மியன்மாருடன் "கணக்கிடப்பட்ட மறுகட்ட பேச்சுவார்த்தை" அவசியமானது என தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விரகுல் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்திய அமைதியை நிலைநாட்டவும், மியன்மாரின் தற்போதைய கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு உதவிகளை வழங்கவும் பேச்சுவார்த்தைக் கதவுகள் திறந்திருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாருடனான பேச்சுவார்த்தை
ஆசியான் அமைப்பின் 'ஐந்து அம்சக் கொள்கை' வழிகாட்டுதலின் படியே இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மார் இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மின் ஆங் லைங்கை, தாய்லாந்து பிரதமர் அனுதின் சந்திக்கவுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அதேவேளையில், மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசியதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவ ஆட்சியாளர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது அவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளபோதிலும், பிராந்திய ஒற்றுமையைப் பேண இந்த நெகிழ்வுத்தன்மை அவசியம் என தாய்லாந்து பிரதமர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.