இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை
மாணவர் பரீட்சை முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியாவில் டெலிகிராம் குறுஞ்செயலிக்கு வரும் திங்கட்கிழமை வரை மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
மேலும், ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளைத் திருத்தும் அம்சத்தை முடக்குமாறும் அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 'இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப்' பாதுகாக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பு
கடந்த மாதம் மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் நுழைவுப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததை அடுத்து அத்தேர்வு இரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற நையாண்டித்தனமான வைரல் இயக்கமும் இளைஞர்களிடையே உருவெடுத்தது.
மறுபரிசீலனை செய்யப்பட்ட புதிய நீட் தேர்வு வரும் ஜூன் 21 நடைபெற உள்ள நிலையில், மோசடி கும்பல்கள் டெலிகிராம் செயலியைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பரீட்சை முகமை தெரிவித்துள்ளது.
தடைகள்
முன்னதாக டெலிகிராமில் உள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், இறுதி கட்ட நடவடிக்கையாகவே இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிகத் தடையால் இலட்சக்கணக்கான பயனாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு அரசு வருத்தம் தெரிவித்துள்ள போதிலும், மாணவர்களின் நலன் மற்றும் பரீட்சை முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை இன்றியமையாதது என்று கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதேவேளையில், இத்தகைய தடைகள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாகத் தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri