மலையகத்தில் பல இடங்களின் ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம் முன்னெடுப்பு
சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06) மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆசிரிய தொழிற்சங்க கூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
மலையகத்தில் நுவரெலியா, பூண்டுலோயா, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்களின் போராட்டங்கள் இடம்பெறுள்ளன.
ஹட்டன்
ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள முரண்பாட்டினை தீர்க்க கோரியும், மாணவர்களுக்கு இணைய வசதிகள் செய்து கொடுக்க கோரியும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ”ஆசிரியர் அதிபர்களின் தொழில் கௌரவத்தைக் கெடுக்காதே , ஒன்லைன் கல்விக்குத் தேவையான வசதிகளை வழங்கு ,பிள்ளைகளின் கல்வி உரிமையினை உறுதிப்படுத்து” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளைக் காட்சிப்படுத்திய வண்ணம் கோஷமிட்டுள்ளனர்.
இப் போராட்டம் தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
1997 ஆண்டு முதல் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 84 நாட்களுக்கு மேல் ஆசிரியர்கள் இணைய மூல கற்றலில் இருந்து விலகியிருந்து பல்வேறு போராட்டங்கள் செய்த போதிலும் இதுவரை இதற்குத் தீர்வு கிட்டவில்லை.
நாட்டின் இலவச கல்வியினை பாதுகாப்பதற்காகவும், தேசிய வருமானத்தில் ஆறு சதவீதத்தினை கல்விக்கு ஒதுக்குமாறு கோரியும், 34 சதவீதமாக உள்ள இணையக் கல்வியினை நூறு சதவீதமாக மாற்றக்கோரியும், சுதந்திர கல்வியினை பாதுகாக்கக் கோரியுமே சுமார் மூன்றுமாதகாலமாக போராடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதன் போது அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் நுவரெலியா நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா தபால் நிலையத்திற்கு பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை எனவும், பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் தீர்வு அவசியம் எனவும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வலப்பனை
வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் வலப்பனை நகரத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
வலப்பனை இலங்கை வங்கி கிளைக்கு முன்னாள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சம்பள முரண்பாடு, நிலுவைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தைக் கருப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் இன்று தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





















காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
