குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை
கம்புருபிட்டிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், ஆசிரியை தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் இரத்தக் கறை படிந்த இரும்புச் சுத்தியல் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டன. மேலும் சுற்றியுள்ள பகுதியில் சோதனை செய்தபோது ஒரு ஓடையின் அருகே இரத்தத்தைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தலையணை உறையும் கண்டெடுக்கப்பட்டது.
கத்தி மற்றும் இரும்பு பூச்சாடியால் தாக்கப்பட்டு ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மரணம் நிகழ்ந்த இடத்தில் மயக்கமடைந்திருந்த தாய் உடனடியாக கம்புருபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தனது நீரிழிவு நோய்க்கான மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரியவந்தது.
இரத்தக்கறை
சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு இரத்தக்கறை படிந்த கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டன, மேலும் அவை தாயாரால் எழுதப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு கடிதம் பொலிஸாருக்கும் மற்றொன்று மகனுக்கும் எழுதப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அந்த கடிதத்தில், மகள் பல ஆண்டுகளாக சொத்து கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது மகள் தன்னை கழுத்தை நெரித்துக் கொள்ள முயன்றபோது இவ்வாறு கொலை செய்யப்பட்டதாகவும் தாய் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தாய் எழுதிய கடிதங்கள் தனது மகனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த ஆசிரியையின் தந்தை சிறிது காலத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார், மேலும் அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
குறித்த குடும்பத்திற்குள் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |