வெளிநாடுகளில் இலங்கை அரசின் தேடுதல் வேட்டை - சிக்கிய முக்கிய புள்ளிகள்
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 குற்றவாளிகளை கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சிவப்பு அறிவிப்புகளுக்கமைய, வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் டுபாயில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மூன்று பேரையும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
சட்ட நடவடிக்கை
வெளிநாடுகளுக்கு சென்ற ஏனைய குற்றவாளிகளும் அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.
இந்த ஆண்டு 11 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை தொடர்பாக 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளன. ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
மீதமுள்ள 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்கள் குறுகிய காலத்திற்குள் கைது செய்யப்பட்டனர். 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று T56 துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் T56 துப்பாக்கிகள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.