குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வெளியான செய்தி பொய்! ஜோன்ஸ்டன் தரப்பிலிருந்து வெளியான விளக்கம்
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாகன இறக்குமதி வரி மோசடி தொடர்பில் தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வெளியான ஊடகச் செய்திகளை மறுத்துள்ளார்.
தமக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன இறக்குமதி வரி மோசடி தொடர்பில் தாம் குற்றஞ்சாட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பில் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக, புதன்கிழமை (28) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டதாகவும், குறித்த வாகனத்தை இறக்குமதி செய்தமை, அதற்குச் சொந்தக்காரராக இருந்தமை அல்லது இறக்குமதி வரி செலுத்தத் தவறியமை தொடர்பில் எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய வாகனத்தின் உரிமையாளர் தாம் அல்ல என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
“மோட்டார் வாகனத்தை வைத்திருந்தமை தொடர்பான சட்டக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதும், வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொள்வதும் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனத்தைத் தமது வசம் வைத்திருந்த நபருக்கு எதிராக கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் தனியான வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என்றும், தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர், ஊடக நிறுவனங்கள் தமது செய்திகளைத் திருத்தி, தாம் ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டுகளின் சட்டரீதியான தன்மையைத் துல்லியமாக விளக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உரிய வரிகளைச் செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பிஎம்டபிள்யூ (BMW) வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டு மற்றும் வரி மோசடி செய்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சொகுசு வாகனம் தொடர்பாக, தனது வழக்கறிஞர்கள் வாயிலாக அவர் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இந்த வாகனம் குறித்து வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 23 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய நாள், கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் 'WP C 24-0430' என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட கருப்பு நிற பிஎம்டபிள்யூ வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.
அந்த வாகனத்தை நிறுத்தி வைத்த நபர், அது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது என்றும், அவரது சாரதியால் ஹோட்டலுக்குக் கொண்டு வரப்பட்டது என்றும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
பிஎம்டபிள்யூ வாகனம்
வாகனத்தைச் சோதனையிட்டபோது, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன; ஆனால், அந்த வாகனத்தின் பதிவு தொடர்பான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை.

மேலதிக விசாரணையில், அந்த பிஎம்டபிள்யூ வாகனத்தில் இருந்த பதிவு இலக்கம், நாவல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், அந்த வாகனத்தின் சேஸிஸ் (chassis) எண்ணைக் கொண்ட வாகனம் எதுவும் இலங்கைக்குச் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை இலங்கை சுங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியது.
பொலிஸாரின் விசாரணைகள்
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் நடத்திய சோதனையில், அந்த வாகனம் சட்டவிரோதமாகக் கட்டமைக்கப்பட்டது (assembled) என்பது கண்டறியப்பட்டது.
மேலும், இந்த பிஎம்டபிள்யூ வாகனத்திற்கும், 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் திருடப்பட்டதாகப் முறைபாடளிக்கப்பட்ட ஒரு சொகுசு வாகனத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்பதையும் பொலிஸாரின் விசாரணைகள் வெளிப்படுத்தின.

பொலிஸாரின் தகவல்படி, இந்த வாகனம் முதலில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டிருந்தது.
இதன் சேஸிஸ் மற்றும் எஞ்சின் எண்கள், இங்கிலாந்தில் திருடப்பட்ட தாகப் முறைபாடளிக்கப்பட்ட வாகனத்துடன் தொடர்புடையவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
you may like this..