வடக்கு மாகாண உற்பத்தியை 10வீதமாக உயர்த்த இலக்கு - ஆளுநர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தின் வளங்களையும் உற்பத்தித் திறனையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்தும் இலக்கை அடைவதற்கு வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 பெரிதும் துணைநிற்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 தொடர்பான உத்தியோகபூர்வ அறிமுகமும் திட்ட விளக்கக் கூட்டமும் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று(29.10.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச கொள்வனவாளர்களை இணைக்கும் தளமாக
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய இலங்கை முகாமைத்துவக் கழகம், அடுத்த கட்டமாக ஏற்றுமதியாளர் மாநாட்டை முன்னெடுப்பது மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளிக்கும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமன்றி, உள்ளூர் உற்பத்திகளைப் பரந்த சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு, உள்ளூர் உற்பத்தியாளர்களையும் சர்வதேசக் கொள்வனவாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களையும் நேரடியாக இணைக்கும் தளமாக அமையவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் வழங்கப்படும் சேவைகளுக்கும் வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், ஏற்றுமதிக்குத் தயாராகும் தொழில் முயற்சியாளர்களின் திறன்களையும் மேம்படுத்துவது மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான கண்காட்சி, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளின் அறிமுகங்கள், நேரடி வர்த்தகச் சந்திப்புகள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி
குறைந்தது 50 முதல் 75 வரையான நேரடி வணிகத் தொடர்புச் சந்திப்புகளை ஏற்படுத்துவதையும், 75 முதல் 100 வரையான தகுதியான கொள்வனவாளர்களை ஈர்ப்பதையும் இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சிக்கு அவசியமான சர்வதேசச் சந்தைத் தகவல்கள், வெளிநாட்டு வர்த்தக விதிமுறைகள், தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான நடைமுறைகள், வர்த்தக நிதி மற்றும் இடர் முகாமைத்துவம், பொருள்களின் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி ஏற்பாடுகள் தொடர்பிலும் உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டமும் இன்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பாடசாலை தெரிவுசெய்யப்பட்டு, அங்கு பாடசாலைத் தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தின் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதோடு, அவற்றைச் சர்வதேசச் சந்தைகளுக்கு ஏற்ற பொருட்களாக மாற்றி, மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்துக்கும் வலுச்சேர்க்கும் நீண்டகால முயற்சியாக வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






