களியாட்டங்களை தவிர்ப்போம் தேசம் எங்கும் நினைவுகூறுவோம்! சரவணபவன் அறைகூவல்
முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களான இந்த ஒரு வாரத்துக்கு நாம் களியாட்டங்களைத் தவிர்த்து குறுகிய
நிலப்பரப்புக்குள் கொன்று குவிக்கப்பட்ட எங்கள் உடன் பிறப்புக்களுக்காக
ஆத்மார்த்தமாக வழிபடுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் (E. Saravanapavan) அறைகூவல் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானதை முன்னிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில்,
”நீதியின் அச்சாணியில் சுழலாத இந்த உலகம், அதிகாரமற்ற தமிழர்களை அடக்கி ஒடுக்கி அணுவணுவாய் கொல்வதை வேடிக்கை பார்த்த அந்தப் பெருந்துயரம் அரங்கேறி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவுறுகின்றன.
முள்ளிவாய்க்கால் சம்பவம்
பச்சிளங் குழந்தைகளையும், பசியால் பல மணிநேரம் கால்கடுக்க கஞ்சிக்காக காத்திருந்த சிறுவர்களையும் ஈவு இரக்கமின்றி கொத்துக்குண்டுகளை வீசிக்கொன்றொழித்த தென்னிலங்கை அரசுக்கு இன்றும் செங்கம்பளம் வீசிக்கொண்டிருக்கும் சர்வதேசத்திடம் தான் நாமும் எமக்கான நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
மேலும், பூகோளபந்தின் அரசியல் சடுகுடுதனங்களும், சகுனி ஆட்டங்களும் எங்களின் நீதிக்கான பாதையை எங்காவது திறப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தி தராதா என்ற அங்கலாய்ப்பிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றோம்.
தாய்நிலம் இன்று தென்னிலங்கை ஆட்சியாளர்களால் வன்புணரப்பட்டு அந்நியர்களால் பங்குபிரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
நினைவு கூறல்
இந்நிலையில், அடுத்த தலைமுறை தாய்நிலத்திலிருந்து தப்பியோடத்துடிக்கின்றது. எங்கள் பேரவலங்களையும் - வலிகளையும் மறக்கச் செய்கின்ற நிகழ்ச்சி நிரல் இளம் சமூகத்திடையே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
மேலும், எம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தச் சவால்களையும் தாண்டியே நீதிக்கான பயணத்தை தொடர வேண்டியிருக்கின்றது.
15 ஆண்டுகளுக்கு முன்னர் மடிந்த அந்த ஆன்மாக்கள், நாங்கள் நீதியைப்பெற்றுத் தருவோம் என்று இன்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றன. அதற்காக காத்திருக்கின்றன.
அந்த ஆன்மாக்களின் நினைவுகளுக்கு உயிர்கொடுக்க நாம் ஆத்மார்த்தமாக உழைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |