முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு
2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் உணர்வுபூர்வமாக நினைவுகூறுப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு
அதற்கமைய, தமிழினப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு (Mullaitivu) முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தகாலத்தில் பொருளாதார தடைகளால் மக்களுக்கு உணவு கிடைக்காத பட்சத்தில், தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.
அதேவேளை, இந்த கஞ்சியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கும் எதிர்கால சந்ததிக்கு எடுத்து கூறும் முகமாக இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது, அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : தவசீலன், ராயூகரன், சான்
யாழ்ப்பாணம்
அதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று நெல்லியடி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
இதன்போது, நெல்லியடி பேருந்து ஐரோப்பிய நிலையத்தில் முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
அதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டுள்ளன.
குறித்த பூஜையில், இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி : எரிமலை, கஜிந்தன், தீபன்
வவுனியா
மேலும், முள்ளிவாய்கால் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த கஞ்சி நகரசபை பொங்கு தமிழ் நினைவு தூபி முன்பாக இன்று (12) வழங்கி வைக்கப்பட்டது.
செய்தி : வசந்தரூபன்
யாழ் தீவகத்தில் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூயில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
செய்தி- தீபன், கஜி
மட்டக்களப்பு
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நேற்று(13) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.
காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
செய்தி - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |