ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இஸ்லாமிய சமூகத்தின் கழுத்தில் மாட்டப்பட்ட தூக்குக்கயிறு..
2019 இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதலில் விசாரணைகள் நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் குற்றவியல் விசாரணை என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்த தாக்குதலுக்கான விசாரணையை சாதாரண குற்றவியல் குற்ற விசாரணையாக மேற்கொள்வது உண்மையை கண்டறிதலை தடுப்பதற்கானதாகவோ, திசை திருப்பும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.இது ஒரு சமூக குற்றம் இன்று வரையறுக்கப்பட வேண்டும்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்
ஆகவே இதனை குற்றவியல் குற்ற வரையறைக்குள் அடக்காது அதனையும் தாண்டி சமூகக் குற்றமாக, ஒரு அரசியல் குற்றமாக, அரச குற்றமாக எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தகுதி வாய்ந்த ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமித்து இக்குற்ற விசாரணை மேற்கொள்வது உண்மையைக் கண்டதற்கான சரியான வழியாகும்.
அதுவே பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பதாகவும் அவர்களுக்கான நீதி நெறிமுறையாகவும் அமையும். அதேபோல நயவஞ்சகமாக பயன்படுத்தப்பட்ட சமூகத்திற்கான நீதியும், நியாயமும், பாதுகாப்பும் வழங்குவதும் இந்த விசாரணையின் இலக்காக அமையவேண்டும்.
2009 ற்கு பின்னரான காலத்தில் இலங்கை தீவுக்குள் இருக்கின்ற நிலையில் இலங்கை ராணுவமும், அதன் புலனாய் துறையும் பெரு வளர்ச்சியடைந்திருக்கிறது.

நினைத்த மறுநிமிடம் இலங்கைத்தீவிற்குள் நிகழக்கூடிய எத்தகைய குற்றச் செயல்களையும் தடுத்து நிறுத்த கூடிய அளவு ஆளணிவளத்தையும், தொழில்நுட்ப வளத்தையும் இலங்கை ஆயுதப்படைக் கொண்டிருக்கிறது.
அத்தகைய சூழலில் இலங்கை ஆயுதப்படைகளுக்கு தெரியாமல், அவற்றுடைய அனுமதியின்றி, அவற்றினுடைய அனுசரணையின்றி எந்த ஒரு தாக்குதலையும் இஸ்லாமியர்களால் இலங்கை தீவுக்குள் நடத்தவே முடியாது என்பதனை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதலுக்கான சமூகவியல் குற்ற விசாரணைதான் அவசியமானது. அதுவே நிலையான சமூகங்களின் பாதுகாப்புக்கும், சுமுகமான வாழ்வுக்கும், அமைதிக்கும், சமாதானத்துக்குமான வழிசமைக்கும்.
எனவே உடனடியாக "சமூக அரசியல் விசாரணை" தேவை என்ற கருத்தியல் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே பௌத்த சிங்கள பௌத்த மதயானைக்கான அங்குசமாக, தறிகெட்ட பேரினவாத சிந்தனைக்கான கடிவாலமாக அமையும்.
சிங்கள அரசியல்வாதிகளும், சிங்களத் தலைவர்களும், பௌத்த மாகாசங்கங்களும், மற்றும் வியப்பாக வியத்மாக அறிஞர் குழாம், ரோஹான் குனரட்னா போன்று முன்னாள் ராணுவ அதிகாரிகள், மற்றும் கடற்படை விமானப்படை பொலிஸ் ஆகியவற்றில் உள்ள படைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ற கருத்துக்கள இலங்கைத் தீவின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அச்சுறுத்தலை ஊட்டுவதாக அமைகின்றன.
அந்த அடிப்படையில் அரசியல்வாதி பாட்டாளி ரணவக்க எழுதிய இஸ்லாமிய சமூகத்தை குறி வைத்து எழுதப்பட்ட சிங்கள பௌத்த சித்தாந்த நூலை குறிப்பிடலாம். அதேபோல பல பௌத்த பிக்குகளின் கருத்துக்களையும் குறிப்பிட முடியும்.
இக்கருத்துக்களின் பின்னணியில் இருந்துதான் இத்தாக்குதலுக்கான கருத்துருவாக்கமும், முஸ்திப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன என்ற அடிப்படையில் ஒரு நிலையான அமைதிக்கும், சமாதானத்துக்குமான ஒரு அடித்தளமாக ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கான சமூக அரசியல் குற்றவியல் விசாரணை என்ற கோணத்தில் இது அணுகப்பட வேண்டும்.
அதற்கு இன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் தயாரா? என்பது கேள்விக்குரியதாகும். இலங்கையின் இனவாத அரசியல் வரலாற்றுப் பண்பாட்டியலில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் என்பது வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடே அன்றி அது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல.
இந்த தாக்குதல் என்பது சிறுபான்மையினர் மீது சிறுபான்மையினர் நடத்திய தாக்குதலாக காட்டுவதன் மூலம் சமூகங்களுக்கிடையான குரோதத்தை வளர்க்கவும், அரசியல் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்குமான ஒரு தாக்குதலாக இது அமைந்திருக்கிறது. இலங்கையின் இனக்குரோத, இனவாத அரசியலின் பரிணாம வளர்ச்சியின் பரிமாணத்தில் இதனை ஆராய்வது அவசியமானது.
அதனை பின்னர் பார்ப்போம். இப்போது நீண்ட இடைவெளி இழுத்தடிப்புகளுக்கு பின்னர் தாக்குதலுக்கான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய தர நிலையையும் அவற்றின் காத்திரத்தன்மை எதிர்கால தகவலுக்கான அடித்தளம் என்ன இந்த விசாரணைகள் நாளும் தீர்ப்புகள் நாளும் நீதி நிலைநாட்டப்படுதா பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உண்மையான நீதி கிடைத்ததா என்பது பற்றியும் பார்ப்போம்.
பொலிஸ் விசாரணைகள்
2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பல நிலைகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை முக்கிய விசாரணைக் குழுக்கள், நீதிமன்ற நடவடிக்கைகள், பொலிஸ் விசாரணைகள் என அரசாங்கம் பல குழுக்களை நியமித்தது.
இவற்றில் முக்கியமானவையாக 1)மலல்கொட குழு (Justice Vijith Malalgoda Committee). இது தாக்குதல் நடந்த 24 மணி நேரத்திற்குள் நியமிக்கப்பட்டது.
உளவு, விசாரணை, தொடர்பு, செயல்பாடுகள், நிர்வாகம் ஆகிய ஐந்து துறைகளில் ஏற்பட்ட தோல்விகளை இது அடையாளம் கண்டுள்ளது.

2)நாடாளுமன்ற தேர்வுக் குழு (Parliamentary Select Committee - PSC) இது 2019 மே மாதம் நியமிக்கப்பட்டது.
உளவுத் தகவல்களைப் பகிர்வதில் இருந்த "உளவு சிலோ" கலாச்சாரத்தை இது சுட்டிக்காட்டியது.
3)ஜனக் த சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணையம் (Presidential Commission of Inquiry - PCoI) இது 2019 செப்டம்பர் 21 அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டது.
இதன் இடைக்கால அறிக்கைகள் 2019 டிசம்பர் மற்றும் 2020 மார்ச் மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டன.
4)இமாம் குழு (Justice S. I. Imam Committee): 2023 செப்டம்பரில் நியமிக்கப்பட்டது.
5)ஜயக்திஸ் யஜகிய் டீ அல்விஸ் குழு (Justice Jayaki De Alwis Committee) என்பதும் இந்த விசாரணைக் குழுக்களின் வரிசையில் அடங்கும்.
அத்தோடு இத்தாக்குதலுக்கான் பிற விசாரணை அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. அவையாவன அ)தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு (Sectoral Oversight Committee on National Security) இக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டது.
ஆ)ஏப்ரல்2026ல் முந்தைய விசாரணைகளின் பரிந்துரைகளை செயல்படுத்துவதைக் கண்காணிக்க புதிய மேற்பார்வைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இ)குற்றப் புலனாய்வுத் துறை (CID) 2019 ஏப்ரல் முதல் பல கட்டங்களாக விசாரணைகளை மேற்கொண்டது.
மூன்று முக்கிய கோரிக்கை
2019 ஏப்ரல்–நவம்பர், நவம்பர் 2019–அக்டோபர் 2024, மற்றும் ஒக்டோபர் 2024 முதல் தற்போது வரை என மூன்று தனித்தனி கட்டங்களாக இவை நடைபெற்றுள்ளன. முன்னாள் உளவுத் தலைவர் சுரேஷ் சல்லை தொடர்பாக CIDதுறை மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணைகளில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் CID பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதியும் உண்மையும் வெளிவர வேண்டும் என்ற கோரிக்கையில் முக்கிய பங்காற்றிய தரப்புகளைப் பார்த்தால்,
1. கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கொழும்பு பேராயர் தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

(அ)தாக்குதலுக்கு காரணமான முழு உண்மையும் வெளிப்படுத்தப்பட வேண்டும். (ஆ)தாக்குதலைத் தடுக்கக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்.
(இ)உள்நாட்டு விசாரணை போதுமானதாக இல்லாவிட்டால் சர்வதேச/ஐ.நா. ஆதரவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். இதனை 2023-ல் கொழும்பு பேராயரகத்தின் சட்டக் குழுவைச் சேர்ந்த Fr. Julian Patrick Perera, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் இந்த சர்வதேச விசாரணை கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறினார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெறுமனே இழப்பீடு கோரியவர்கள் மட்டுமல்ல, நீதிமன்ற நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டனர். பல குடும்பங்கள் மற்றும் பிற மனுதாரர்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவற்றின் அடிப்படையில்தான் 2023 ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு முன்னாள் உயரதிகாரிகள் மீது பொறுப்பை நிர்ணயித்து இழப்பீடு செலுத்த உத்தரவிட்டது.
இந்த வழக்குகளின் விளைவாக உருவான Easter Attack Victim Fund-க்கு மொத்தம் ரூ.311 மில்லியன் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குறிப்பாக கார்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள், “தாக்குதலை நடத்தியவர்களை மட்டும் தண்டிப்பது போதாது; தாக்குதலைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகளின் பொறுப்பும் ஆராயப்பட வேண்டும்” என்ற சட்டரீதியான கோணத்தை முன்னெடுத்தனர்.
2023 உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் மல்கம் ரஞ்சித் சார்பில் வழக்கறிஞர் Duthika Perera, குற்றவியல் நடவடிக்கையும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாக Associated Press செய்தி வெளியிட்டது.என்பதும் கவனத்திற்குறியது.
4) இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சட்டக் குழுவின் பங்கு நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டுப்படவில்லை. அது உள்நாட்டு விசாரணைகளின் முன்னேற்றத்தை கண்காணித்தது, விசாரணையில் விடுபட்ட கேள்விகளை எழுப்பியது, சர்வதேச அளவில் விவகாரத்தை எடுத்துச் சென்றது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்தது.
இதில் திருச்சபையின் சட்டக் குழுவைச் சேர்ந்த Fr. Julian Perera, 2023-ல் இலங்கை நீதிமன்றங்களில் தாக்குதலின் திட்டமிடுபவர்கள் மற்றும் மூளையாக இருந்தவர்கள் தொடர்பாக குற்றவியல் தீர்ப்பு வரவில்லை என்று சுட்டிக்காட்டி, ஐ.நா. அளவிலான விசாரணை தேவை எனக் கூறினார். இது திருச்சபையின் நிலைப்பாடு என்பதைத் தனியாகக் குறிப்பிடுவது முக்கியம்.
5) 2023 ஏப்ரல் 21 அன்று, தாக்குதலின் நான்காவது ஆண்டு நினைவு நாளில், திருச்சபை “We are watching until justice is done” என்ற கருப்பொருளில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது.
இதில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தினரும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். இதன் நோக்கம் குற்றவாளிகளை பழிவாங்குவது அல்ல; உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோருவது என திருச்சபை விளக்கியது.
இங்கே முக்கியமான இரண்டு கேள்விகள் உள்ளன (அ) தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்பது இது குற்றவியல் விசாரணையின் கேள்வி. மற்றையது (ஆ) தாக்குதல் நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள் யார்? இது பொறுப்புக்கூறல் மற்றும் அரசின் அலட்சியம் தொடர்பான கேள்வி. 2023 உச்சநீதிமன்ற வழக்கு பெரும்பாலும் இரண்டாவது கேள்வியை மையமாகக் கொண்டது.
நீதிமன்றம், அப்போது ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐந்து முன்னாள் உயர் அதிகாரிகள் தங்கள் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளை மீறியதாகக் கண்டறிந்து இழப்பீடு செலுத்த உத்தரவிட்டது.
அதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UN Human Rights Council): இலங்கை அரசின் விசாரணைகளில் தாமதம் மற்றும் பொறுப்புக் கூறல் இன்மை குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. முக்கிய அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும், பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில்தான் எழு வருடங்கள் அரசியல் தலையீடுகள், மற்றும் இன, மத ரீதியான அரசியல் காழ்புணர்வுகள், அத்தோடு சிங்கள அரசியல் தலைவர்களே திட்டமிட்டு இத்தாக்குதலை நடாத்துவித்த சூத்திரதாரிகள் என்பதனால் விசாரணையை திசை திருப்பும் முயற்சிகள் அதிகம் நடைபெற்றன.
நீண்ட இழுத்தடிப்புக்களுக்கு பின்னர் புதிய NPP அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதனாலும் தமது அரசியல் எதிரிகளை மீண்டும் எழுச்சி பெற முடியாதளவுக்கு முடக்கப்ப வேண்டும் என்ற நோக்கத்தில்த்தான் இப்போது இத்தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் 41 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முதல் கட்டமாக இலங்கை படைத்தரப்பின் மீதான வழக்கு விசாரணை இடம்பெற்றது. இவ் வழக்கில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான விசாரணையின் நீதிமன்ற இறுதி தீர்ப்பு2026 ஜூலை 31 அறிவிக்கப்பட்டது.
கடுங்காவல் சிறைத்தண்டனை
நீதிபதிகளான பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய, திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய விசேட கொழும்பு மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) இந்த விசாரணையில் படைத்துறை சார்ந்த இருவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன,
அவற்றில் 1)குற்றவியல் அலட்சியம்: முன்னெச்சரிக்கை புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது. 2)கொலை மற்றும் கொலை முயற்சி: தாக்குதல்களுக்கு உதவி மற்றும் தூண்டுதல்.
3)கடமை பொறுப்புகளை தவறியமை, அரசு அதிகாரிகளாக தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறியது என்பவை முக்கியமானவை. மேற்குறிப்பிட்டவை உள்ளிட்ட 854 குற்றச்சாட்டுகளில் அவர்களை குற்றவாளிகளாக கொழும்பு மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) கண்டறிந்தது. அதனடிப்படையில் அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது.

மரண தண்டனையுடன் மேலதிகமாக இருவருக்கும் மொத்தம் 6,504 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பு 2-1 பெரும்பான்மை தீர்ப்பாக அமைந்தது. நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்; நீதிபதி விராஜ் வீரசூரிய எதிர்ப்புத் தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேல்முறையீட்டின் பிரகாரம் தற்போது மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இத்தண்டனைக்கும் எதிர்காலத்தில் அரசு மன்னிப்ளித்து விடுதலை செய்யும் என்பது திண்ணம்.
ஆயினும் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு முன்னாள் பொலிஸ் தலைமை அதிகாரிக்கும், ஒரு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டமை என்பது இதுவே முதல் சம்பவமாகும்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்டர் படுகொலை தாக்குதலுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் முதன்மை குற்றவியல் வழக்கு (HC 2972/21) கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு (Trial-at-Bar) முன்னிலைப்பட்டது. நவுபர் மெளலவி உட்பட 24 பேர் மீது 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2026 செப்டம்பர் 22 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்பட்டு, 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தப் பல்வேறு நிலை விசாரணைகள் இருந்தபோதிலும், தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த "மறைமுக சக்திகள்" குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதே நடைமுறை யதார்த்தமாகும்.
இந்நிலையில் ஈஸ்டர் படுகொலை தாக்குதலுக்கான வரலாற்று இயங்கியல் போக்கின் தோற்றமும், வளர்ச்சி பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 05 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.